

நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தால் நீதித் துறையின் சுதந்திரம், மாட்சிமை பறிபோகாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்துக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு தேதி குறிப் பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒய்.கிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு வினர் புதிய நீதிபதிகளை அரசியல் குறுக்கீடு இல்லாமல் தேர்வு செய் கின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மத்திய அரசு நீதிபதிகள் நியமன மசோதாவை நிறைவேற்றியுள்ளது. புதிய சட்டப்படி அமைக்கப்படும் குழுவில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீதிபதிகள் நியமனத் தில் அரசியல் தலையீடு ஏற்படும். எனவே, நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை அரசிதழில் வெளியிட தடைவிதிக்க வேண்டும். சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், உதவி சொலி சிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர் வாதிடும்போது, புதிய முறையில் நீதிபதிகள் நிய மனத்தை மேற்கொள்ளும்போது, நீதிமன்றத்தின் சுதந்திரம் ஒரு போதும் பாதிக்கப்படாது.
நீதிபதிகள் நியமனம் நிர்வாக ரீதியிலான ஒரு நடைமுறை. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதால் நீதித் துறையின் சுதந்திரம், மாட்சிமை பறிபோகாது.
நீதிபதிகள் நியமனச் சட்டம் இன்னும் அரசிதழில் வெளி யிடப்படவில்லை. அதற்குள் அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்பது முதிர்ச்சியற்றது.
நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ளன. எனவே, இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மனுவை விசாரிக்க வேண்டாம் என்றனர்.
இதையடுத்து, மனு மீதான தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.