

திருமழிசை அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே உள்ளது குண்டுமேடு கிராமம். இக்கிராமத்தில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே கிரிக்கெட் விளையாட்டு போட்டி தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி குண்டு மேடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது, இரு தரப்பினைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அவர்களை கிராம மக்கள் சமாதானப்படுத்தினர்.
மறுநாள் ஜீவா என்பவர் மற்றொரு தரப்பினரால் தாக்கப் பட்டார்.
இதுதொடர்பாக நேற்று முன் தினம் மாலை இரு தரப்பினருக்கிடையே பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால், மீண்டும் மோதல் வெடித்தது. இதில் முத்து, அலமேலு, நாகராஜ், கோபி ஆகியோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக இரு தரப் பினரும் அளித்த புகாரின்பேரில் 11 பேர் மீது வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரச்சினைக்குரிய பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.