

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளையில் உள்ள கட்டியில் இருந்து ஊசி துவார துளையிட்டு திசுவை எடுத்து பரிசோதனை செய்வதற்காக ரூ.55 லட்சத்தில் நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் வி.விமலா, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ரங்கநாதன் ஜோதி மற்றும் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ரகுநந்தன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
இந்த மருத்துவமனையின் முக்கியத் துறையாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை உள்ளது. மூளையில் கட்டிகள் மற்றும் சீழ் இருந்தால், அதன் திசுக்களை எடுத்து பரிசோதனை செய்ய தலையில் அறுவை சிகிச்சை மூலமாக மண்டை ஓட்டை திறக்க வேண்டும். இதற்காக நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். ரத்தமும் அதிகமாக வெளியேறும். மூளையில் இருந்து திசுக்களை எடுப்பதற்கு எப்படியும் சுமார் 5 மணி நேரம் ஆகிவிடும்.
இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வருவாய் மூலமாக ரூ.55 லட்சத்தில் ஸ்டீரியோடாக்ஸி என்ற நவீன கருவி 2 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது. இந்த நவீன கருவியின் உதவியுடன் மண்டை ஓட்டை திறக்காமல் சிறிய துளையிட்டு மூளையில் உள்ள கட்டியில் இருந்து திசுவை எடுக்கலாம். அதன்பின் பரிசோதனையில் அது எந்த வகை கட்டி என்பதை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த நவீன கருவியின் மூலமாக இதுவரை 9 பேரின் மூளையில் இருந்த கட்டிகளில் இருந்து திசுக்களை எடுத்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு ஆவடியை சேர்ந்த மோகன கிருஷ்ணன் (64) என்பவரின் மூளையில் இருந்த கட்டியின் திசுவை எடுத்து பரிசோதனை செய்ததில், அவருக்கு இருப்பது காசநோய் கட்டி என்பது தெரியவந்தது. அந்த கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கணினி உதவியுடன் இந்த நவீன கருவி செயல்படுகிறது. தலையில் ஊசி துவாரம் அளவு துளையே இடப்படுவதால், நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியதில்லை. ரத்தமும் வெளியேறாது. நோயாளியும் சில நாட்களில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.