

தமிழகத்தில் 1.98 கோடி ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் ஒட்டப்பட் டுள்ளது என்று மாநில உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டுகளில் இந்த ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணி முழுநேரமாக செயல்படும் சுமார் 23 ஆயிரத்து 355 கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் தற்போது 1 கோடியே 99 லட்சத்து 87 ஆயிரத்து 220 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் தாமதமானது. இதன் காரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இந்த ஆண்டும் உள்தாள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு துறை அதிகாரி கூறும்போது,”தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி பெரும்பாலும் முடிந்துள்ளது. தற்போது சுமார் 1 கோடியே 98 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது.ரேஷன் கார்டுகளில் உள்தாளை எப்போது வேண்டுமானலும் ஒட்டிக்கொள்ளலாம். ஆதலால் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டாத நுகர்வோர்கள் தாங்களுக்கு தேவைப்படும் போது உள்தாள் ஒட்டிக்கொள்ளலாம்” என்றார்.