

நாடு முழுவதும் உள்ள இ. எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் வரும் கல்வியாண்டுடன் மூடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கே.கே. நகரில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர் விஜய் கூறியதாவது:
“கடந்த ஆண்டு இ.எஸ்.ஐ. மருத்துவ துறையினரின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தற்போது மத்திய அரசு நடத்தி வரும் 11 இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் வரும் கல்வியாண் டோடு மூடப்படும் என தெரிவிக்கப் பட்டது. பின்னர் இ.எஸ்.ஐ. மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை அடுத்து இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் எந்த அரசின் கீழ் செயல்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.
இ.எஸ்.ஐ. கல்லூரிகள் மூடப்படும் என்ற மத்திய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும். இ. எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க வேண்டும்” என்றார்.