Published : 07 Feb 2015 10:26 AM
Last Updated : 07 Feb 2015 10:26 AM

ஐ.டி. ஊழியர்களின் குறை தீர்க்க தீர்ப்பாயம்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஐ.டி. தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து, அவர்களின் நலன் காக்கும் வகையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் அதிக அளவில் பணிநீக்கம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இது பற்றி தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக் கான மன்றம் ஒரு குழு அமைத்து ஆராய்ந் தது. இக்குழுவில் மனித உரிமை செயல் பாட்டாளர் பி.ஆர்.பி.பாஸ்கர், சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் துணை பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர், வழக்கறிஞர் பாபி குன்ஹா, சந்திரிகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இக் குழுவினர் தங்கள் ஆய்வு முடிவுகள் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:

ஐ.டி. துறையில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவது புதிதல்ல. ஆனால், டிசிஎஸ் நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை புதிதானது. ஐ.டி. துறையில் ஓரளவு அனுபவம் கொண்ட 30 முதல் 45 வயது வரையிலான ஊழியர்கள்தான் வேலை இழக்கின்றனர். அவர்களில் பலர் முதல் தலைமுறையினர். இந்த வேலையை நம்பித்தான் அவர்களது குடும்பங்கள் இருக்கின்றன. வேறு நிறுவனங்களில் அவர்களுக்கு உடனே வேலை கிடைக்காது.

இது டிசிஎஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த அறிவுசார் துறை யையும் பாதிக்கும் பிரச்சினை. மேற்பார்வை பணி இல்லாத அனைவரும் தொழிலாளர்கள் என்று தொழில் தகராறுகள் சட்டம் கூறுகிறது. ஆனால், ஐ.டி. நிறுவனங்கள் அதை ஏற்றுக் கொள்வது இல்லை. ஐ.டி. துறையில் பணிபுரி பவர்கள் தொழிற்சங்கங்களில் இருக்கக் கூடாது என்றும் நிர்வாகங்கள் கூறுகின்றன.

ஒரு நிறுவனம் ஒரு பணியாளரை நீக்க நினைத்தால், முன்னதாகவே அவருக்கு நோட்டீஸ் கொடுத்து, அவரது கருத்தைக் கேட்ட பிறகே அவரை நீக்குவது குறித்து முடிவு எடுக்க முடியும். டிசிஎஸ் நிறுவனம் திடீரென்று பணியாளர்களை அழைத்து ‘வேலை இல்லை’ என்று கூறியது சட்டவிரோதம். இது ஊழியர்களிடம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்.

குறைவான பணித்திறன் கொண்ட, அல்லது பணித்திறனே இல்லாதவர்களை மட்டுமே வெளியேற்றுவதாக கூறுகிறார்கள். டிசிஎஸ் நிறுவனத்தின் பணித்திறன் மதிப்பீட்டுக் கொள்கையையும், அது நடைமுறைப்படுத்தப்படும் விதத்தையும் ஆராயும்போது, அது வெளிப்படையாக இல்லை என்று தெரிகிறது. இந்த மதிப்பீட்டுக் கொள்கை ஊதியத்துடன் சம்பந்தப்பட்டதால், பலருக்கு குறைவான மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பணியாளர் மதிப்பீட்டுக் கொள்கையை டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இதுபற்றிய முழு தகவல்களை அரசுக்கு அளிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் அரசு மவுனமாக இல்லாமல் ஐ.டி. நிறுவன தொழிலாளர் கொள்கைகளை ஆய்வு செய்யவேண்டும்.

ஐ.டி. துறை தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி ஆராய நிரந்தர அறிவுசார் தீர்ப்பாயம் அமைத்து ஐ.டி. தொழிலாளர் நலனை மேம்படுத்த வேண்டும். ஐ.டி. துறைக்கு தனியாக வேலைவாய்ப்பகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x