

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அரசியல் வேட்கை ஒளிந்திருக்கும். அந்த வேட்கை எனக்கு ஏற்பட்டதும் இயல்பான ஒரு நிகழ்வுதான் என்று முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் கூறினார்.
தமிழக முன்னாள் டிஜிபியும் டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவரு மான ஆர்.நடராஜ், கடந்த 1-ம் தேதி அதிமுகவில் சேர்ந்தார். அடுத்த 2 நாள்கள் கழித்து, முன்னாள் டிஜிபி யான ஏ.எக்ஸ்.அலெக்சாண்டரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். தமிழக உளவுத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற அவர், அதிமுகவில் சேர்ந்தது பற்றி ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:
அரசியல் ஆர்வம் திடீரென வந்தது எப்படி?
மனிதன் ஒரு அரசியல் விலங்கு என்றான் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ் டாட்டில். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அரசியல் வேட்கை ஒளிந்திருக்கும். அந்த வேட்கை எனக்குள்ளும் இருக் கிறது. அதனால்தான் அரசியலில் குதித்திருக்கிறேன். இது இயல்பான ஒரு நிகழ்வுதான்.
நீங்கள் உயரிய அரசுப் பதவியில் இருந்துள்ளீர்கள். அப்போது உங் களுக்குள் இந்த அரசியல் வேட்கை இருந்ததா?
போலீஸ் அதிகாரிகள் சட்டதிட்டங் களுக்கு உட்பட்டவர்கள். நானும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு என் கடமையை நேர்மையாகவே செய்துவந்தேன். பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது சுதந்திரமானவனாக ஆகிவிட்டேன். அதனால், எனது அரசியல் வேட் கையை தணித்துக் கொள்ளும் அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் பணி ஓய்வுக்குப் பிறகு, அரசியலில் சேர்வது ஒருவித நெருடலாக இருக்கிறதே?
35 ஆண்டுகளாக ராணுவச் சீருடையை அணிந்திருந்த இந்திய முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கூட, பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் அரசியலில் சேர்ந்தார். அரசியலுக்கு நல்லவர்கள் வரவேண் டும் என்றுதானே எல்லோரும் சொல்கிறீர்கள். நல்லவர்கள், திறமை யானவர்கள் அரசியலுக்கு வரவேண் டும். குடிமைப்பணி அதிகாரிகள் அரசியலில் சேர்வது இப்போது ஒரு ‘டிரெண்ட்’ ஆகிவிட்டது.
அரசியல் ஆர்வம் வந்தது சரி. அதி முகவை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
அதிமுகவில் சேர்ந்ததற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிலேயே ஒழுக்கமான கட்சி அதிமுக. அந்தக் கட்சியில் கடைக்கோடி தொண்டன்கூட தலைமைக்குக் கட்டுப் பட்டு ஒழுக்கமாக நடப்பான். நானும் ஒழுக்கத்தை விரும்புபவன். அதனால் அதிமுகவை இயல்பாகவே எனக்குப் பிடித்திருக்கிறது.
இரண்டாவதாக, பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்றா வதாக, அரசு விவகாரங்களில் கட்சியி னரின் தலையீடு இருப்பதில்லை.
நான்காவதாக, முதல்வர் ஜெயலலிதாவின் துணிவான தலைமைப் பண்பையும் தீர்க்கமான முடிவுகளையும் பெரிதும் மதிக்கிறேன். அவற்றை சிறப்பாகவும் செயல்படுத்தி அசத்துகிறார். பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை எடுக்கிறார். நான் டிஜிபியாக இருந்த போது அதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
பிரச்சாரத்துக்கு அழைத்தால் போவீர்களா?
எனக்கு அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவை மட்டும்தான் தெரியும். வேறு ஒருவரையும் தெரியாது. பிரச்சாரத்துக்கு போக வேண்டும் என்றால் 10 பேராவது தேவைப்படுவார்கள் இல்லையா?
இவ்வாறு அலெக்ஸாண்டர் கூறினார்.