

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவால், பாஜகவின் வேஷம் கலைந்துவிட்டது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
பாஜகவின் அனைத்து பலங் களையும் மீறி ஆம் ஆத்மி கட்சி அசாதாரணமான வெற்றியை பெற்றுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்த நிலையில், மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
தங்களின் எதிர் பார்ப்புகளை கேஜ்ரிவால் நிறை வேற்றுவார் என்று மக்கள் நம்பினர். அதனால், ஆட்சியை அவரிடம் ஒப்படைத் துள்ளனர். இந்த வெற்றியை கேஜ்ரிவால் பொறுப்புடன் கையாள வேண்டும். கடந்த காலங்களில் செய்தது போன்ற தவறுகளை மீண்டும் அவர் செய்துவிடக்கூடாது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பதை 1977-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டெல்லி வாக்காளர்கள் நிரூபித்துள்ளனர். சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பது தான் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி யாகும். பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜென்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்துவிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்:
இந்த வெற்றி வகுப்புவாத, பிளவு சக்திகளுக்கு எதிராக பலமொழிகள் பேசும் டெல்லி மக்கள் கொடுத்த தெளிவான தீர்ப்பு. இது ஒரு வகையில் இந்தியப் பெருமக்களின் பொதுவான அபிப்ராயத்தை வெளியிடுவதாக அமைந்துள்ளது. ஆளும் கட்சி யான பாஜக தனது முழு அதிகார, பிரச்சார, பண பலத்தை பயன்படுத்தியும் பரிதாபமான தோல்வியை தலைநகரிலேயே பெற்றிருப்பது தலையில் விழுந்த அடிக்கு சமமாகும். இந்தத் தீர்ப்பு மதசார்பற்ற ஜனநாயக சக்தி களுக்கு ஊக்கமளிக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
பாஜக அரசின் மதவாதக் கொள்கை, மக்கள் நலத் திட்டங் களை முடக்கும் செயல், மத ரீதியான பிரிவினை போன்றவற்றை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் வெளிப் பாடுதான் டெல்லி தேர்தல் முடிவு. வெறும் கோஷங்களை மட்டுமே வைத்து ஆட்சி செய்யும் பாஜகவின் வேஷம் கலையத் தொடங்கியிருக்கிறது.
மூமுக தலைவர் சேதுராமன்:
டெல்லி வாக்காளர்களில் 80 சதவீதம் பேர் படித்தவர்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆம் ஆத்மிக்கு துணிச்சலுடன் வாக் களித்துள்ளனர்.
காங்கிரஸ் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர்:
டெல்லி தேர்தல் பாஜகவுக்கு படுதோல்வியை தந்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசை டெல்லி மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர். பாஜக தோல்வியின் தொடக்கம், மக்கள் மனநிலையின் வெளிப்பாடாகும். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.க. தலைவர் கி.வீரமணி:
பிரதமர் மோடி 5 முறை பிரச்சாரம் செய்தும் டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இதை இந்துத்வா மதவெறிக்கு கிடைத்த மரண அடியாகவே கருத வேண்டும். இது முடிவல்ல.. நல்ல தொடக்கம்.
தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன்:
கடந்த மக்களவைத் தேர்தலிலும் அதற்கடுத்து பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. ஊழலுக்கு எதிராக போராடிய ஆம் ஆத்மியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் ஊழலுக்கு எதிரான மனநிலையை டெல்லி மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன்:
பிரதமர் மோடியின் ஆடைக் கவர்ச்சி, அலங்காரப் பேச்சு, ஆட்சி அதிகாரம், கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்புலம், அமித்ஷாவின் அரசியல் உத்தி எல்லாம் மக்கள் சக்திக்கு முன்னால் செல்வாக்கு இழந்து செயலற்றுப் போய்விட்டதையே ஆம் ஆத்மியின் வெற்றி வெளிப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.