Last Updated : 09 Feb, 2015 09:47 AM

 

Published : 09 Feb 2015 09:47 AM
Last Updated : 09 Feb 2015 09:47 AM

குழந்தை உடலில் தானாக தீக்காயங்கள் ஏற்படவில்லை: உண்மையை கண்டுபிடிக்க போலீஸ் விசாரணை

குழந்தையின் உடலில் தானாக தீக்காயம் ஏற்படவில்லை என்பது உறுதியாகிவிட்டதால், போலீஸ் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கூலித் தொழிலாளி கருணா (26) - ராஜேஸ்வரி (24). இவர்களது குழந்தைகள் நர்மதா (3), ராகுல் (2). பிறந்த இரண்டரை மாதங்களில் ராகுல் உடலில் தானாக தீக்காயம் ஏற்படுவதாகக் கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்தனர். குழந்தைக்கு 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. காயங்கள் குணமானதும் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

மீண்டும் அதே பிரச்சினை

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களிலேயே குழந்தையின் உள்ளங்கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. மயிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி இரவு சேர்க்கப்பட்டது. இந்த குழந்தையின் உடலிலும் தானாக தீக்காயம் ஏற்படுவதாக பெற்றோர் கூறினர்.

37 பரிசோதனைகள்

பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடலில் தானாக தீப்பிடிக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முதல் குழந்தை ராகுல் போலவே, இந்த குழந்தைக்கும் ரத்தம், சிறுநீர், வியர்வை உட்பட 37 பரிசோதனைகள் செய்யப்பட்டன. குழந்தை உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.

மனநல ஆலோசனை

மருத்துவமனையின் மனநல டாக்டர் ராஜரத்தினம், குழந்தையின் பெற்றோரை ஒன்றாகவும் தனித்தனியாகவும் அழைத்து மனநலம் தொடர்பாக பல கட்டமாக ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில், உள்ளங்கால்களில் இருந்த காயங்கள் குணமானதால் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபு கூறியதாவது:

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியின் முதல் ஆண் குழந்தை ராகுலுக்கு 20 நாட்களுக்கு மேல் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை உடலில் 3 முறை தானாக தீக்காயம் ஏற்பட்டதாக தந்தை கருணா கூறினார். ஆனால் இதை ராஜேஸ்வரி பார்க்கவில்லை. 2-வது குழந்தை 20 நாட்களாக சிகிச்சையில் இருக்கிறது. இந்த குழந்தையின் உடலில் சுற்றியிருந்த துணி திடீரென தீப்பற்றி எரிந்ததால் குழந்தையின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டதாக ராஜேஸ்வரி சொல்கிறார். அப்போது வீட்டில் கருணா இல்லை. இங்கு மருத்துவமனையில் சிகிச்சையின்போது, 2 குழந்தை களின் உடலிலும் தானாக தீப்பற்றவில்லை. தானாக தீக்காயமும் ஏற்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலீஸ் முன்பு டிஸ்சார்ஜ்

குழந்தையின் உடலில் எப்படி தீக்காயம் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க, தீப்பற்றி எரிந்த துணியை தடயவியல் துறையிடம் கொடுக்கவுள்ளோம். மருத்துவமனையில் இருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் போலீஸார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். பிறகு, இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸாரிடம் கூற உள்ளோம். அவர்களது பெண் குழந்தை நர்மதாவுக்கு இதுபோல எதுவும் நிகழவில்லை. 2 ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இதுபோன்ற பிரச்சினையைக் கூறுகின்றனர்.

இவ்வாறு டீன் நாராயணபாபு கூறினார்.

தடயவியல் விசாரணை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயங்கள் சிகிச்சைத் துறை முன்னாள் தலைவர் டாக்டர் ஜெகன்மோகன் கூறியபோது, ‘‘குழந்தை ராகுல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரச்சினையுடன் இங்கு வந்தபோது நான் சிகிச்சை அளித்தேன். குழந்தையின் உடலில் தானாக தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை. குழந்தையின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே அப்போதும் பரிசோதனை முடிவுகள் வந்தன.

உடலில் தானாக தீப்பற்றி காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றுதான் டிஸ்சார்ஜ் செய்த போது மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டது. தற்போது, அதே பிரச்சினையுடன் 2-வது ஆண் குழந்தையைக் கொண்டு வந்துள்ளனர். குழந்தை உடலில் தானாக தீப்பற்றி தீக்காயம் ஏற்பட வாய்ப்பே கிடையாது. போலீஸார், தடயவியல் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x