ஏலச்சீட்டு கட்டாதவரை எரித்து கொன்று தற்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்

ஏலச்சீட்டு கட்டாதவரை எரித்து கொன்று தற்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்
Updated on
1 min read

சைதாப்பேட்டையில் ஏலச்சீட்டு கட்டாதவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற ஆட்டோ ஓட்டுநர், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:

சென்னை சைதாப்பேட்டை அருகே சின்னமலை வெங்கடாபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (45). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இருவரும் மாற்றுத்திறனாளிகள். அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (51) என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். ஆட்டோவும் ஓட்டுவார். இவரிடம் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டில் சண்முகம் சேர்ந்திருந்தார். தொடர்ந்து 15 மாதங்கள் பணம் கட்டி சீட்டை பிடித்து, அமல் ராஜிடம் இருந்து பணத்தையும் வாங்கியிருக்கிறார் சண்முகம். பணத்தை வாங்கிய பிறகு மாதந் தோறும் சீட்டு பணம் கட்டுவதை சண்முகம் நிறுத்திவிட்டார்.

இதனால் சண்முகத்திடம் அடிக்கடி பணம் கேட்டுள்ளார் அமல்ராஜ். மேலும் கிண்டி காவல் நிலையத்திலும் புகார் செய்தார். போலீஸார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்த, பணத்தை கொடுத்துவிடுவதாக சண்முகமும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் எழுதி கொடுத்தனர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் சண்முகம் வீட்டுக்கு சென்று அமல்ராஜ் பணத்தை கேட்டுள்ளார். நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகும் பணம் கொடுக்க சண்முகம் மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த அமல்ராஜ், ஆட்டோவுக்காக வாங்கிய பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு, சண்முகம், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீதும் ஊற்றியுள்ளார். பின்னர் தீக்குச்சியை கொளுத்தி அவர்கள் மீது வீச, தம்பதி மீதும், அமல்ராஜ் மீதும் தீப்பிடித்தது.

ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் மற்றும் அருகே இருந்த வர்கள் ஓடி வந்து, தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவிலேயே அமல்ராஜ் இறந்தார். நேற்று காலையில் சண்முகம் இறந்தார். ராஜேஸ்வரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in