Published : 01 Apr 2014 08:41 PM
Last Updated : 01 Apr 2014 08:41 PM

தமிழக தொழிலதிபர்கள் கர்நாடகம் செல்லவில்லை: திமுகவுக்கு ஜெயலலிதா பதில்

தமிழக தொழிலதிபர்கள் கர்நாடகம் செல்லவில்லை என்றும், தொழில் புரிவோருக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும் திமுகவுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.

கோயம்புத்தூரில் அதிமுக வேட்பாளர் நாகராஜனை ஆதரித்து மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியது:

"தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரங்களைப் பார்த்தால், தற்போது தமிழ்நாட்டில் அதிக அளவு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வரும். திமுக ஆட்சிக் காலத்தில், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் 2008-2009 ஆம் ஆண்டு 26,122 என்று இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மார்ச் 2013 முடிவில், எனது ஆட்சிக் காலத்தில் 40,352 ஆக உயர்ந்துள்ளது.

தொழில்கள் வளர்ந்துள்ளனவா என்பதைக் கணிக்க முக்கியமான அளவுகோல் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில தொழிலாளர் ஆயுள் காப்பீட்டு நிறுவன கணக்குப்படி, 31.3.2011 அன்று, அதாவது முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில், 84 லட்சத்து 21 ஆயிரத்து 904 என்று இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, எனது ஆட்சிக் காலத்தில் 31.12.2013 அன்று 1 கோடியே 60 லட்சத்து 61 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 76 லட்சத்து 39 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் சுலபமான கடன் வசதி, தொழில்நுட்ப வசதி, எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2006 முதல் 2011 வரையிலான முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் 1,78,160 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டன. ஆனால், 2011 முதல் 2014 ஜனவரி மாதம் வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் 2,55,718 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள் எல்லாம் கர்நாடக மாநிலத்திற்கு சென்று விட்டார்கள் என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் குறிப்பாக தி.மு.க. மேற்கொண்டு வருகின்றன.

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க வருமாறு கர்நாடக முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் எந்த இடத்தில் தொழில் தொடங்க இருக்கிறார்கள், யாருக்கு எவ்வளவு இடம் ஒதுக்க இருக்கிறார்கள் என்பதை பற்றி எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று சொன்னால், அங்கே சாலைகள் அமைக்கப்பட வேண்டும், மின் வசதி செய்து தரப்பட வேண்டும், தண்ணீர் வசதி செய்து தரப்பட வேண்டும். ஆனால், இது போன்ற வசதிகள் ஏதாவது அங்கே செய்யப்பட்டு இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்நாடகத்தில் உள்ள தொழில் அதிபர்களே அங்கே செல்ல ஆர்வம் காட்டாத நிலையில் தமிழக தொழில் அதிபர்கள் எப்படி ஆர்வம் காட்டுவார்கள்?

இந்தக் கூட்டம் முடிந்தவுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? "எங்களை அழைத்தார்கள், வந்தோம். அவ்வளவு தான். எந்தச் சூழ்நிலையிலும் சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்க நாங்கள் தயாராக இல்லை. கர்நாடக அரசை நம்பி நாங்கள் அங்கே செல்லத் தயாராக இல்லை" என்று கூறி இருக்கிறார்கள்.

இது அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது. சைமா அமைப்பினைச் சேர்ந்தவர்களும் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள். ஒரு தொழில் அதிபர் கூட கர்நாடக மாநிலத்திற்குச் சென்று தொழில் துவங்க தயாராக இல்லை என்பது தான் உண்மை நிலை.

எனது தலைமையிலான இந்த அரசுக்கு எதிராக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இது போன்ற விஷமப் பிரச்சாரங்களை தி.மு.க-வினர் செய்து வருகின்றனர்.

மத்திய திட்டக் குழு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி எளிதில் தொழில் புரிய வாய்ப்பாக விளங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் அலகில் இருக்கிறது. அதாவது, தொழில் புரிவோருக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதே சமயத்தில் கர்நாடகா இரண்டாவது அலகில் பின் தங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பற்றி தி.மு.க. வினரும் இதர கட்சியினரும் குறிப்பிடுவது வடிகட்டின பொய்.

தொழில் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்கும் மின் உற்பத்தியிலும் எனது அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. எனது அரசின் பகீரத முயற்சிகளின் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும்.

ஒரு வாரத்திற்கு முன்பு சில மின் நிலையங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓரிரு நாட்கள் மின்வெட்டு ஏற்பட்டது. அவை விரைந்து சரி செய்யப்பட்டுவிட்டன. இருப்பினும் இதைப் பற்றி பல அரசியல் தலைவர்களும் பெரிது படுத்தி தீராத மின்வெட்டு வந்துவிட்டது போல பேசினார்கள். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. தற்போது அனைத்து மின் நிலையங்களும் நன்றாக செயல்பட்டு வருகின்றன. மின் விநியோகத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எனவே, மின்சாரத்தை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவிலேயே மின் வெட்டே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங். மதசார்புடைய கட்சியா?

காங்கிரஸ் கட்சியை நன்றி மறந்தவர்கள் என்று சொல்லிவிட்டு, "இதே காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி, நாங்கள் இந்த மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம். நாங்கள் மத வெறியர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால், என்று முன் வருவார்களேயானால், அவர்களை போனால் போகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும்" என்று கூறி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்தப் பேச்சு அவருடைய தடுமாற்றத்தைத் தான் காட்டுகிறது. காங்கிரஸ்காரர்கள் மனம் வருந்தி மதச்சார்பற்ற நிலைக்கு திரும்புகிறோம் என்று சொல்ல வேண்டும் என்கிறார் கருணாநிதி. அப்படியானால் காங்கிரஸ் கட்சி கடந்த பத்து ஆண்டுகளாக மத சார்புடையதாக இருந்ததா? மத சார்புடையதாக இருந்தது என்றால் அந்தக் கட்சியை கருணாநிதி ஏன் ஆதரித்தார்? அந்தக் கட்சியின் கூட்டணியின் அமைச்சரவையில் ஒன்பது ஆண்டு காலம் திமுக ஏன் இருந்தது? என்பதை கருணாநிதி விளக்க வேண்டும். விளக்கத் தயாரா?

இவற்றிற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி மனம் வருந்தி வந்தால் ஆதரிப்போம் என்கிறார் கருணாநிதி. அப்படி என்றால், இலங்கை பிரச்சனைக்காக வெளியே வந்தது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக என்பதும், உண்மையிலேயே தமிழர்கள் மீதும், தமிழினத்தின் மீதும், கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பதும், 2ஜி வழக்கில் இருந்து எப்படியாவது வெளிவர வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களை பேசுகிறார் என்பதும் தெளிவாகிறது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது குறித்து கருணாநிதி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இறுதியாக இந்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதாக கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளார் கருணாநிதி. இவர் கண்டிப்பது இருக்கட்டும்! இந்த மனிதநேயமற்ற காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் ஆதரிக்க மாட்டேன் என்று கருணாநிதி ஏன் சொல்லவில்லை? இனிமேலாவது அவ்வாறு கூறும் துணிவு கருணாநிதிக்கு வருமா? என்ன நினைக்கிறீர்கள்? வருமா? வராது. எப்படி வரும்?

உங்களின் வாக்குகளை வாங்குவதற்காக, இலங்கை பிரச்சனையை சுட்டிக் காட்டி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளி வந்ததாக சொன்ன கருணாநிதி, உங்களை ஏமாற்றி உங்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்றும், அதன் மூலம் மீண்டும் உங்களை ஏமாற்றலாம் என்றும் நினைக்கிறார். தன்னலத்திற்காக தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க-விற்கு வருகின்ற தேர்தலில் நீங்கள் சவுக்கடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x