இலங்கை வடக்கு மாகாண தீர்மானம்: இந்தியா ஆதரிக்க கோரி பேரவையில் தீர்மானம் வேண்டும் - திருமாவளவன் பேட்டி

இலங்கை வடக்கு மாகாண தீர்மானம்: இந்தியா ஆதரிக்க கோரி பேரவையில் தீர்மானம் வேண்டும் - திருமாவளவன் பேட்டி
Updated on
1 min read

இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அது குறித்து ஐநா சுதந்திரமான விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய வருகை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மை அது அல்ல. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐநா சபையில் வரும் மார்ச் மாதம் நடத்தப்படவுள்ள விசாரணையை தள்ளிப் போடவே சிறிசேனா இந்தியா வந்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் சிறிசேனா ஆதரவு கோரி வருகிறார். அதற்குதான் அவர் இந்தியா வந்துள்ளார். தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் சில தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியபோது, சிறிசேனா அதனை ஏற்றார். ஆனால் அப்படி செய்ய முடியாது என்று சிங்களர்களிடம் அவர் கூறினார்.

இது சிறிசேனாவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. வட கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அவர் ராணுவ முகாமை அமைத்துள்ளார். போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று கூறி வந்த அவர் இப்போது அதை எதிர்க்கிறார்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு, வடக்கு மாகாண தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in