Published : 28 Feb 2015 09:30 AM
Last Updated : 28 Feb 2015 09:30 AM
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அட்டாக் பாண்டியின் முன்ஜாமின் மனு, 4-வது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு. இவர் 31.1.2012 அன்று கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக தேடப்பட்டுவரும் அட்டாக் பாண்டி, ஏற்கெனவே 3 முறை முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், அட்டாக் பாண்டி 4-வது முறை முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பிறப்பித்த உத்தரவு:
பொட்டு சுரேஷ் கொலையில் மனுதாரருக்கு தொடர்பு இருப்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளது. பொட்டு சுரேஷ் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றச் செயலாகும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பொட்டு சுரேஷை கொலை செய்ய தங்களை அட்டாக் பாண்டி ஏவியதாக தெரிவித்துள்ளனர். அரசு தரப்பில் கொலை வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை.
ஆனால், பொட்டு சுரேஷ் கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என பொத்தாம் பொது வாக தெரிவித்து, எந்தவித ஆவணங் களும் இல்லாமல் மனுதாரர் முன்ஜாமின் கோரியுள்ளார். அட்டாக் பாண்டி மீது ஏற்கெனவே 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமின் நிபந்தனைகளை மனுதாரர் நிறைவேற்றவில்லை. அவர் சட்டத்தை மதிக்கவில்லை. சட்டத்துக்கு கீழ்படியாதவருக்கு சட்டத்தின் பலனை வழங்க முடியாது. மேலும், மனுதாரர் 2013-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றமும் அறிவித்துள்ளது.
தேடப்படும் குற்றவாளி மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. எனவே, முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.