Published : 06 Feb 2015 07:13 PM
Last Updated : 06 Feb 2015 07:13 PM

அதிமுக ஆட்சியில் தடியடிகள் நிற்கவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

சட்டக் கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தடியடிகள் இதோடு நிற்கவில்லை. என்று திமுக தலைவர் கருணாநிதி அதிமுக அரசை குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் குறளகம் மற்றும் பாரிமுனைப் பகுதிகளில் சாலை மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை குறித்து அவர்களின் பிரதிநிதிகளை முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்வதற்குப் பதிலாக, காவல் துறையினரைக் குவித்து, பிரச்சினையைத் தீர்க்கச் சொன்னதன் காரணமாக, அவர்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தி ஐந்து மாணவர்களின் மண்டை உடைந்திருக்கிறது.

மேலும், பல மாணவர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. ஆறுமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் வேறு சாலையில் சென்றிருக்கிறார்கள். பொறுமையாக தலைமைச் செயலகம் நோக்கிச் சென்ற மாணவர்களை காவல் துறையினர் தடுத்த காரணத்தால்தான் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மோதல் சம்பவத்தை அடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்களைத் தாக்கிய பிறகு, மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியிருக்கிறார்கள்.

முதலமைச்சர் தலைமைச் செயலாளரோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார். மாணவர்களை முன்பே அழைத்துப் பேசியிருந்தால், சாலை மறியலும் நடந்திருக்காது, அவர்களும் தாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க இந்த ஆட்சியினர் முயன்றிருக்கிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்களின் பிரச்சினையை முறையாகத் தீர்க்காத காரணத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமாத்திரமல்ல, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக அடிப்படை வசதி கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு போராட்டம் நடத்திய உடற்கல்வி மாணவர்கள் மீது நேற்றைய தினம் போலீசார் தடியடி நடத்தியிருக்கிறார்கள். .

காயமடைந்த மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களில் யாராவது கைது செய்யப்பட்டிருந்தால் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த மாணவர்களின் பிரதிநிதிகளை உடனடியாக முதல் அமைச்சரும், தலைமைச் செயலாளரும் அழைத்துப் பேசி சமாதானம் செய்து பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தைப் போல, உடற்கல்வி இயல் மாணவர்களின் போராட்டமும் மாநில அளவில் விரிவடைய நேரிடும்.

அ.தி.மு.க. ஆட்சியில் தடியடிகள் இதோடு நிற்கவில்லை. முறையாக வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கக் கோரிய நாகர்கோவில் மண்டலப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீது நேற்றைய தினம் காவல் துறையினர் தடியடி நடத்தியிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மணல் குவாரியை முற்றுகையிட்ட அந்தக் கிராம மக்கள் மீது போலீசார் 4-2-2015 அன்று தடியடி நடத்தியதில் ஐந்து பெண்கள் உட்பட 17 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

மதுரையில் தங்களுக்கு நிறுத்தப்பட்ட முதியோர், விதவை உதவித் தொகையைக் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தாய்மார்கள் மீது தடியடி என்று கடந்த இரண்டு மூன்று நாட்களில் நடைபெற்ற போலீஸ் தடியடிகளை மாத்திரம் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். அ.தி.மு.க. ஆட்சி மக்கள் நல அரசா? மக்களை மாக்களாக எண்ணித் தடியடியில் ஈடுபட்டுத் தர்பார் நடத்தும் அரசா? '' என்று கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x