

கிரானைட் முறைகேடு குறித்து விசா ரணை நடத்திவரும் அதிகாரி சகாயம் தனது இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த இரண்டரை மாதங்களாக ஆய்வில் ஈடுபட்ட சகாயம் நேற்று 8-வது கட்ட விசாரணையை மதுரையில் தொடங்கினார்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக 15 நாட்கள் வரை குவாரிகளில் ஆய்வு செய்து முறைகேடுகள் குறித்து ஏராளமான தகவல்களை சேகரித்தார். விவசாயிகள், பொதுமக்கள், குவாரி அதிபர்கள், பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
குவாரிகளில் விதிமீறல், விவசாயம் உள்ளிட்ட தொழில் நஷ்டம், அரசு நிலத்தில் அத்துமீறல், புராதனச் சின்னங் கள் அழிப்பு என பாதிப்புகள் குறித்து ஏராளமான தகவல்களை இரண்டரை மாத ஆய்வில் சகாயம் திரட்டினார்.
இந்த தகவல்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் மார்ச் 10-ம் தேதிக் குள் அறிக்கை தாக்கல் செய்ய சகாயம் திட்டமிட்டுள்ளார். இதற்காகப் பல்வேறு விவரங்களைக் கேட்டு காவல் துறை, கனிமவளம், வருமான வரி, வணிக வரி, சுங்கம், கப்பல் போக்குவரத்து, மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு சகாயம் கடிதம் அனுப்பியுள்ளார். நாளைக்குள் பதில் அனுப்பும்படி கேட்டுள்ளார்.
இதனிடையே அறிக்கை தயாரிப்பு குறித்து குழுவினருடன் சகாயம் நேற்று ஆய்வு நடத்தினார்.
இதற்கிடையே குவாரிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் படம் பிடிக்கும் பணி 3-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து முறைகேடாக கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரியை ஆய்வுக் குழுவினர் பிடித்து கனிமவளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.