

`கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி தொடங்க ஏதுவாக வெப்பநீர் சோதனை ஓட்டம் இன்று முதல் ஒரு வாரத்துக்கு நடைபெறுகிறது. அப்போது ஏற்படும் சத்தம் கேட்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்’ என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்துள்ளார்.
ஒரு வார சோதனை
அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெப்பநீர் சோதனை ஓட்டத்துக்கு அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் பிப்ரவரி 26-ம் தேதி அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி இச்சோதனை இன்று தொடங்கி ஒரு வாரத்துக்கு மேற்கொள்ளப்படும். பின்னர் ஒரு மாதம் கடந்து மீண்டும் இந்த சோதனை மேற்கொள்ளப் படும்.
வெப்பநீர் சோதனை ஓட்டத்தின் போது நீராவி பாய்ந்துசெல்லும் பாதை மற்றும் நீராவியை வெளியேற்றும் உபகரணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இச் சோதனையின்போது அணு உலையிலிருந்து வளிமண்டலத்தில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு நீராவி வெளியேற்றப்படும். சத்தமும் எழும்பும். இதுகுறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை
இச்சோதனை பகலில் மட்டுமே மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ கேடு விளைவிக்கும் வகையில் எந்த சோதனைகளும் அணுஉலையில் மேற்கொள்ளப்படாது.
ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் முதலாவது அணுஉலையில் பிப்ரவரி 27-ம் தேதி வரை 462 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.