

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வர்மா நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது துணை தூதர் பிலிப் ஏ.மின் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ கத்தில் ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உள்ள தொழில்வாய்ப்புகள் குறித்து பன்னீர் செல்வம் எடுத்துரைத்தார்.
தமிழக அரசு சார்பில் சென்னையில் மே 23, 24-ம் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க வர்த்தக குழுவினருக்கும், முதலீட்டாளர்களுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையை நினைவுகூர்ந்த ரிச்சர்டு வர்மா, தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.