

திருப்போரூர் அருகே ஆக்கிரமிப்புக்குள்ளான 162 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் நேற்று மீட்டனர்.
திருப்போரூர் வட்டம், தையூர் கிராமப் பகுதியில் சென்னை ஐஐடி நிறுவனத்தின் கூடுதல் கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையங்களை கட்டுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் 162 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து 25-க்கும் மேற்பட்ட பண்ணை வீடுகளைக் கட்டியிருந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பன்னீர்செல்வத்துக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அவரது உத்தரவின்பேரில், வருவாய்த்துறையினர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த இடம் வருவாய்த்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.