13-வது நாளாக தொடரும் வனக்கல்லூரி மாணவர் போராட்டம்

13-வது நாளாக தொடரும் வனக்கல்லூரி மாணவர் போராட்டம்
Updated on
1 min read

வனத்துறை பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்கள், 13-வது நாளாக நேற்றும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு படித்துவரும் மாணவ, மாணவிகள் வனத்துறையில் உள்ள வனச்சரகர் காலிப் பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். வனவர் பணியிடங்களுக்கு வனவியல் படித்த பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 27-ம் தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு, பகலாக வெட்ட வெளியில் கல்லூரி வளாகத்தில் அமர்ந்தபடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராடி வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து 13-வது நாளாக கழுத்து வரை முழுவதுமாக மண்ணைக் கொண்டு உடலை மூடியபடியும், மரக்கன்றுகளை மண் மீது நட்டபடி, 4 மாணவர்கள் படுத்துக் கொண்டனர். அவர்களைச் சுற்றி பிற மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதையும் எதிர்காலம்

தற்போது வனம் சார்ந்த பட்டப் படிப்புகளை வனவியல் பட்டதாரிகளுக்கு எவ்வித முன் உரிமையும் கொடுக்காமல் வெளியிடப்பட்டுள்ள வனவர் பதவிக்கான அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், இதுவரை கழுத்து வரை புதைந்து போயுள்ள தங்களது எதிர்காலம், இனி தலையோடு புதைந்து ஒட்டுமொத்தமாக மரித்துப் போய்விடும் என்பதை விளக்கும் விதமாக இந்த நூதன போராட்டத்தை மேற்கொண்டோம்.

அரசு இனியும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in