Last Updated : 20 Feb, 2015 10:18 AM

 

Published : 20 Feb 2015 10:18 AM
Last Updated : 20 Feb 2015 10:18 AM

மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்

நாளை (பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம்

தமிழக பழங்குடியினரின் மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின் றன. இதில் 75 சதவீத மக்கள் பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். மீதமுள்ள மொழிகளை உலகெங்கிலும் சிறுபான்மையினர்களாக வாழக் கூடிய பழங்குடியின மக்கள் பேசுகின்றனர்.

இதில் பலவற்றுக்கு எழுத்து வடிவமே கிடையாது. மேலும் பல்வேறு காரணங்களாலும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்து வருகின்றன. இதனால் அழிந்துவரும் தாய்மொழிகளைக் காப்பது அவசியம் என உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 17.11.1999-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிப். 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியது.

`ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி, வரலாற்றை அழித்தால் போதும்’ என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு.

கடந்த பிப்ரவரி 2010-ல் அந்தமான் தீவுகளின் 65,000 ஆண்டுகள் பாரம்பரிய தொன்மை கொண்ட ‘போ' மொழியைப் பேசிவந்த 85 வயதுடைய ‘போவா ஸ்ர' என்ற பெண் உயிரிழந்தார். ‘போ' மொழியை பேசிய கடைசி நபர் அவர் என்பதால் 'போவா ஸ்ர' இறந்துடன் ‘போ' மொழியும் மறைந்து போனது.

தமிழகத்தில் பழங்குடியினர்

அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியான், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

இதில் ஒவ்வொருவரும் ஒவ் வொரு மொழியைப் பேசக்கூடிய வர்கள். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக பழங்குடிகள் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.5 சதவீதம் ஆகும்.

பகிர்ந்துகொள்ளும் இயல்பு

தமிழக பழங்குடியினர்கள் மற்றும் அவர்களின் மொழிகளின் நிலை குறித்து சமூக ஆர்வலர் உதயகுமார் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

‘‘பழங்குடியின மக்கள் தங்களுக்கென்று பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த எதையும் வைத்துக்கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சியாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர்கள்.

பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. ஆனால் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடம்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களுக்காக பழங்குடியின மக்களின் மொழிகள் தற்போது அழியத் தொடங்கியுள்ளன.

பழங்குடியினரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதன்மை பயிற்று மொழி, தாய் மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், பழங்குடியினரின் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தமிழக்குப் பதிலாக, பழங்குடியினர் மொழியில் சிறப்பு பாடத்திட்டங்களை உருவாக்கி அதனை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தால் மாத்திரமே தமிழகப் பழங்குடியினரின் மொழிகளைப் பாதுகாக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x