

‘இன்னொருவரும் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும்’ என்று ப.சிதம்பரத்தை கூறவில்லை. எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கள் கூட்டம், சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. பின்னர் நிருபர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:
‘இன்னொருவரும் தனது வாரிசுடன் கட்சியை விட்டு வெளி யேற வேண்டும்’ என்று நான் கூறிய கருத்து, சிதம்பரத்தை கூறுவதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. தமிழகத்தில் காலியாகவுள்ள மாவட்டத் தலைவர்கள் பொறுப்பை நிரப்ப கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளேன். தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஜெயந்தி நடராஜன் வகித்த பொறுப்புக்கு வேறொருவரை நியமிப்பது தொடர்பாக அகில இந்திய தலைமை முடிவெடுக்கும்.
தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் 8-ம் தேதி நடக்கவுள்ளது. இதையடுத்து சோனியா மற்றும் ராகுல் காந்தியை அழைத்து வந்து தமிழகத்தில் விரைவில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.
காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். இலக்கு நிர்ணயிப்பது, இணையதளம், மிஸ்டு கால் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
கடந்த ஆண்டு மே மாதத்தில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டாலராக இருந்தது. தற்போது அது 54 டாலராக குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆகவும், டீசல் விலையை ரூ.34 ஆகவும் குறைத்திருக்க வேண்டும். சென்னை சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது.
இலங்கையில் புதிய அரசு அமைந்த பிறகு, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில் 70 சதவீதம் பேர் சொந்தநாடு திரும்ப விரும்புகின்றனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துகொடுக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.