Published : 09 Feb 2015 10:53 AM
Last Updated : 09 Feb 2015 10:53 AM

பசுமை விழாவாக மாறிய காதணி விழா: இலவச மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்புக்கு உயிர்கொடுத்த அரசு ஊழியர்

திருமணம், புதுமனை புகுவிழா, காதணி விழா உள்ளிட்ட குடும்ப விழாக்கள் என்றால் சொந்தபந்தங்கள், நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து உபசரிப்போம். நீண்ட நாள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களும் ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்புடன் விடை பெறுவர். அதனால் உறவுகளைப் பலப்படுத்துவதற்காக இதுபோன்ற குடும்ப விழாக்களுக்கு உறவினர்களையும், நண்பர்களையும் அழைக்கிறோம்.

சமீபகாலமாக தமிழகத்தில் அரசு விழாக்கள் மட்டுமின்றி, இதுபோன்ற குடும்ப விழாக்களிலும் மரக்கன்றுகள் நடுவது, இலவசமாக மரக்கன்றுகள் வழங்குவது போன்ற நல்லெண்ண செயல்பாடுகள் அதிகரித்து வருவதை காணும்போது, சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மெல்ல உணரத் தொடங்கியுள்ளதையே காட்டுகிறது.

திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியைச் சேர்ந்த மின்வாரிய கடைநிலை ஊழியர் ராமகிருஷ்ணன், இயற்கையை நேசிக்க வேண்டும், மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்காக நேற்று தனது குழந்தையின் காதணி குடும்ப விழாவுக்கு வந்த உறவினர்கள், நண்பர்களுக்கு 800 தென்னங்கன்றுகள், பூவரசு, புங்கன், வேம்பு, தங்க அரளி, செம்பருத்தி, இட்லிப்பூ, ஆரஞ்சி டெக்கோமா, பெருங்கொன்றை உள்ளிட்ட 20 வகையான 2,000 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

இந்த விழாவில் மரம் வளர்ப்பு சிந்தனை பற்றிய கருத்தரங்குக்கும் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அதில் இயற்கை ஆர்வலர்கள் பலர், விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு மரங்கள் வளர்ப்பின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதால் காதணி விழாவானது பசுமை விழாவாக மாறியது.

விருந்து முடிந்ததும் கையில் அனைவரும் ஒவ்வொரு மரக்கன்றை எடுத்துக்கொண்டு, அவற்றை தங்கள் வீடுகளில் நடுவதற்கு உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். பெற்றோருடன் வந்த சின்னஞ்சிறு குழந்தைகள்கூட, கையில் மரக்கன்றுகளுடன் குதூகலமாக நடந்து சென்றது, பச்சை மனதிலும் மரம் வளர்ப்பு சிந்தனை துளிர்விட்டதை அடையாளம் காட்டியது.

முகூர்த்தக்கால் மரம்

இதுகுறித்து ராமகிருஷ்ணன் `தி இந்து'விடம் கூறியது: தமிழர் குடும்ப விழாக்களில், முகூர்த்தக்கால் மரம் நடும் பழக்கம் இருக்கிறது. முன்னோர்கள் அன்று, ஒவ்வொருவருடைய கலாச்சாரத்துக்கு தகுந்தவாறு தூருடன் கூடிய மரத்தை முகூர்த்தக்காலாக நட்டு பால், தண்ணீர் ஊற்றி அந்த மரத்தை வளர்த்தனர். அந்த மரம் செழித்து வளர்ந்து ஒரே தூரில் பல கிளைகள் விடும். அந்த மரங்களைப்போல் வாரிசுகள் உருவாகி முறிவு ஏற்படாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முகூர்த்தக்கால் நடும் வழக்கம் நமது பாரம்பரிய பண்பாட்டில் இணைந்தே இருந்தது.

அதனால், அன்று வீடுகளைச் சுற்றிலும் மரங்கள் இருந்தன. குடும்ப விழாக்களில், முந்தைய காலத்திலே மரம் நடும் பழக்கம் இருந்ததற்கு இது ஓர் உதாரணம். இந்த பழக்கத்தை நாகரிக கலாச்சாரத்தில் இடையில் சற்று மறந்துவிட்டோம். தற்போது, வீட்டில் கொஞ்சம் காலி இடம் கிடந்தால், அதிலும் ஒரு அறை கட்டி வாடகைக்கு விடுகிறோம்.

காலச்சக்கரத்தின் அவசரத் திலே எதிர்காலத்துக்காக பணத்தை சேமிப்பதிலே குறியாக இருக்கிறோம். நம் வீட்டில் ஒரு மரம் நட்டால் அது பிற்காலத்தில் நிழல் தரும். வீட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அந்த மரம் பயன்படும். முன்பெல்லாம் செல்லும் இடமெல்லாம் மரங்கள் அடர்த்தியாக இருக்கும். மரம் நட்டால் மண் அரிப்பு ஏற்படாது. நிலத்தடி நீர் மட்டும் நிலைக்கும். மழைவளம் பெருகும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

அதனால், என்னுடைய இந்த குடும்ப விழாவில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி மர வளர்ப்பை ஊக்குவிக்க கருத்தரங்குக்கும் ஏற்பாடு செய்தேன். என்னுடைய திருமணத்துக்கு வந்தவர்களுக்கு இதுபோல் மரக்கன்று வழங்கினேன். எங்கள் பகுதி கல்லூரியிலும், வீட்டிலும் மரங்கள் நட்டோம். இன்று அது செழித்து வளர்ந்து நல்ல நிழல் தருகிறது என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x