

ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப் படுவதையொட்டி, இந்தியாவில், புனே, நாசிக், பெங்களூர், உத்தராஞ் சல், குஜராத், ஓசூர், ஊட்டி, கொடைக்கானல், இமாச்சலப்பிர தேசம் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள் துபை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஓசூர் பகுதியில் இருந்து ஆண்டுக்கு 60 லட்சம் பூக்கள் ஏற்றுமதியாகும். கொடைக்கானல், ஊட்டி, கோவை உள்ளிட்ட மற்ற இடங்களில் இருந்து பெயரளவுக்கு ஏற்றுமதியாகும். இந்த ஆண்டு கொடைக்கானலில், காதலர் தின ரோஜா சாகுபடி நடைபெறவில்லை.
உலக காதலர்களை மகிழ்விக்க
காதலர் தின கொண்டாட்டத்துக் காக, ஜனவரி 20-ம் தேதி முதலே வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி தொடங்கி விட்டது. இந்த ஆண்டு சர்வதேச மலர் சந்தை யில் சீனா, ஈக்வெடார், எத்தியோப் பியா, கென்யா, ஹாலந்தில் உற் பத்தியாகும் ரோஜா மலர்களுடன் போட்டியிட முடியாமல் இந்திய மலர் கள் வரவேற்பை இழந்துள்ளதால், மலர் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
40 லட்சமே ஏற்றுமதியாக வாய்ப்பு
ரோஜா ஏற்றுமதியாளர் பால சிவபிரசாத் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை காதலர் தின ரோஜா ஏற்றுமதி தொடங்கிவிடும். இந்த ஆண்டு ஓசூர், கோவை, பெங்களூர் நகரங்களில் இருந்து 2 கோடி ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 40 லட்சம் பூக்கள் ஏற்றுமதியானாலே ஆச்சரியம்தான். ஆப்பிரிக்க நாடு களில் உற்பத்தியாகும் ரோஜா மலர் ஸ்டெம்ஸ் (குச்சிகள்) 140 செ.மீ. வரை காணப்படும். இந்திய மலர் களை காட்டிலும் தரமாகவும், கவர்ச்சி யாகவும் உள்ளன. இந்திய மலர்களு டைய ஸ்டெம்ஸ் 50 முதல் 70 செ.மீ. வரை மட்டுமே காணப்படுகிறது. அதனால் சர்வதேச சந்தையில் சீன, ஆப்பிரிக்க மலர்களுடன் இந்திய மலர்கள் போட்டியிட முடியவில்லை. ஆப்பிரிக்காவில் ஒரு ரோஜா மலர் உற்பத்தி செய்ய, ஒன்றரை ரூபாய் முதல் 2 ரூபாய் வரை செலவாகிறது. இந்தியாவிலோ 4 ரூபாய் வரை செலவாகிறது.
உலகளவில் இந்திய ரோஜா மலர்கள், இரண்டாம், மூன்றாம் தர மலர்களாகிவிட்டன. இந்தியாவில் கூலியாட்கள் பற்றாக்குறையால் ஊதிய உயர்வு, பராமரிப்புச் செலவு, உரம், மின்சாரம், விமானப் போக்குவரத்து கட்டணம் அதிகமாக உள்ளது. ஒரு கிலோ ரோஜா பூக்களை துபை சந்தைக்கு கொண்டு சென்று விற்க 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை செலவாகிறது.
ரோஜாவுக்கு போட வேண்டிய முக்கிய உரமான கால்சியம் நைட் ரேட், 20 கிலோ மூட்டை சீனாவில் 200 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்தியா வில் அதன் விலை ரூ.1,100. செடி களில் ரோஜா மலர்கள், சரியான பரு வத்தில் அறுவடை செய்ய மொட்டு கள் விரிவடையாமல் இருக்க போடப் படும் மலர் தொப்பி (கேப்) சீனாவில் ஒரு கிலோ 170 ரூபாய்க்கு கிடைக் கிறது. இந்தியாவில் 600 ரூபாய்க்கு கிடைக்கிறது. விவசாயிகள், உற்பத்தி செய்த ரோஜா மலர்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய தமிழகத் தில் போதுமான குளிர்பதனக் கிடங்கு வசதிகள் இல்லை. தனியார் குளிர்பதனக் கிடங்கு அல்லது சொந்தமாக பல லட்சம் ரூபாயில் அமைத்து பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தச் செலவுகளை ஈடுகட்டி, சர்வதேச சந்தையில் லாபம் ஈட்ட முடியாததால் விவசாயிகளும், இந்த ஆண்டு காதலர் தினத் துக்காக ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றார்.
சீனப் புத்தாண்டால் சர்வதேச ரோஜா வர்த்தகம் சரிவு
சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிப்ரவரி 16-ம் தேதியே தொடங்கிவிடுகிறது. அதனால் உலக நாடுகளில் வசிக்கும் சீனர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவர். அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுவதால், காதலர் தினத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். சர்வதேச ரோஜா வர்த்தகம், சீனாவை சார்ந்துதான் உள்ளது. சீனாவில் சாதாரண நலம் விசாரிப்புக்குக்கூட ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவிப்பதை கலாச்சாரமாக கொண்டுள்ளனர். அவர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுவதால் சர்வதேச சந்தையில் ரோஜா வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.