Published : 16 Feb 2015 02:24 PM
Last Updated : 16 Feb 2015 02:24 PM

ஸ்ரீரங்கம் தேர்தலை காங். புறக்கணித்தது நியாயமே: இளங்கோவன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை தங்கள் கட்சி புறக்கணித்தது நியாயமானதே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ஜனநாயகத்தின்படியோ, சட்டத்தின்படியோ உண்மையான தேர்தலாக இருக்காது என்கிற காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதிலிருந்து விலகியது. இன்றைக்கு வருகிற தேர்தல் வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால் எங்கள் நிலை நியாயமானது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடநத் 2011-ம் ஆண்டில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,20,962. தற்போது, 2015-ல் மொத்த வாக்காளர்கள் 2,70,281. ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்காளர்கள் திடீரென்று முளைத்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி முளைத்தார்கள் என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பயனில்லாத நிலையில் நீதிமன்றத்தை நாடிய பிறகு, போலி வாக்காளர்களை நீக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற ஆணையையும், தேர்தல் ஆணையம் மதித்து நிறைவேற்றவில்லை. கிட்டத்தட்ட அதிமுக அரசின் கைப்பாவையாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் நடந்த ஜனநாயக படுகொலைக்கு 2016 சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x