Published : 17 Feb 2015 01:17 PM
Last Updated : 17 Feb 2015 01:17 PM

அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரை எதற்காக?- மு.க.ஸ்டாலின்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை, ஊழல் கொடி கட்டி பறக்கிறது. தொழில் வளர்ச்சி இல்லை. அரசு கடனில் தத்தளிக்கிறது. புதிய முதலமைச்சரோ, இன்னும் முதலமைச்சர் அறைக்குக் கூட போகவில்லை. இத்தகைய நிலையில், அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரை எதற்காக? யாருக்காக என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஆண்டு, மேதகு ஆளுநர் உரையாற்றும்போது முதலமைச்சராக இங்கே வீற்றிருந்தவர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தால் நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு சட்டப் பேரவை உறுப்பினர் பதவியும், முதலமைச்சர் பதவியும் பறி போய் விட்டதால், இன்று இங்கே இல்லை.

புதிய முதலமைச்சரோ, இன்னும் முதலமைச்சர் அறைக்குக் கூட போகவில்லை; முதல்வர் ஆசனத்தில் அமரவில்லை; போகவில்லையா? போக அனுமதிக்கப்பட வில்லையா? கச்சேரி மேடை ஏறியும் பாட அனுமதியில்லாத பாடகராகி விட்டார் பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. பொறுப்பேற்ற போது 13-5-2011 அன்று ஜெயலலிதா அளித்த பேட்டியில் "தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். ஆட்சிப் பொறுப்பேற்று தோராயமாக ஒன்றரை ஆண்டுக்குள் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது எல்லாம் உங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள். இனி சிரித்துக் கொண்டே இருங்கள். தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையுமென்று உறுதி கூறுகிறேன்" என்றெல்லாம் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்படுகிறதா? தமிழகத்தில் செயின் பறிப்பு நடக்காத தெருக்கள் உண்டா? வழிப்பறி, திருட்டு நடக்காத ஊர்கள் உண்டா? கொலை, கொள்ளை நடக்காத நகரங்கள் உண்டா? அங்கிங்கெனாதபடி எங்கனும், எல்லா நாட்களிலும் குற்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நீதி மன்றத்திலேயே, காவல் நிலையத்திலேயே அனைவரின் கண்ணெதிரிலேயே கொலைகள் நடக்கின்றன. அமைச்சரின் உறவினரே கொலை செய்யப்படுகிறர். நீதிபதிகள் வீட்டிலேயே திருட்டு நடைபெறுகிறது. ஆளுங்கட்சிக்காரர்கள் முதல், அத்தனை கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஆட்சியிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை மாநகரக் காவல் துறை அதிகாரி வெளியிட்ட புள்ளி விவரம் தவறு என்பதை மெய்ப்பிக்கும் வகையில்; மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி சென்னையில் ஆதாயக் கொலைகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன. 2013ஆம் ஆண்டு நகை-பணத்திற்காக 15 ஆதாயக் கொலைகள் என்றால், 2014ஆம் ஆண்டில் 20 ஆதாயக் கொலைகள் நடந்துள்ளன.

மாணவர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், அரசியல் கட்சிகள் போராட்டம், அரசு அலுவலர்கள் போராட்டம் - என இந்த ஆட்சியிலே போராட்டம் நடத்தாத பிரிவினர்கள் யாராவது உண்டா? எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படாததால், மனப் புழுக்கமும் போராட்டமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

மின் கட்டணம் உயர்வு - பால் விலை உயர்வு - பேருந்துக் கட்டணம் உயர்வு - அத்தியாவசியப் பொருள்களின் விலை வாசி உயர்வு - சிமெண்ட் விலை உயர்வு - செங்கல் விலை உயர்வு - என விலை உயராத பொருள் ஏதாவது உண்டா? விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது; வேதனை ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினரின் கதவைத் தட்டுகிறது!

ஊழலோ ஒவ்வொரு துறையிலும் கொடி கட்டி உயர உயரப் பறக்கின்றது. தாது மணல் ஒன்றில் மட்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் ஊழல் - மணல் கொள்ளை மாபெரும் ஊழல் - டெண்டர்கள் அளிப்பதிலே ஊழல் - பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தேர்வில் ஊழல் - தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் ஊழல் - மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்குவதில் ஊழல் - ஒவ்வொன்றிலும் ஊழல், ஊழல், ஊழல்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பரில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெறும். இந்த ஆட்சியிலே இந்த ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடே நடைபெறவில்லை. விவாதித்து, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் என்று ஒரு பட்டியல் இருந்தால்தானே மாநாடு!

அ.தி.மு.க. ஆட்சியின் நிதி நிலை சீர்கெட்டுப் போனது பற்றி விமர்சனம் செய்யாத ஏடுகளே இல்லை! மின்வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன்களை யெல்லாம் சேர்த்தால் மொத்தக் கடன் நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி, தமிழக அரசு கடனில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது, எந்த அமைச்சர்களையும் அவரவர் துறைக்கான அறிவிப்புகளைக் கூடப் படிக்கவொட்டாமல், தன்னைப் பற்றியே விளம்பரம் நடைபெற வேண்டுமென்பதற்காக, நூற்றுக்கு மேற்பட்ட அறிக்கைகளை ஜெயலலிதாவே இந்த அவையில் படித்தாரே; அந்த அறிவிப்புகளின் கதி என்னவாயிற்று? அதற்காக அனைவரும் கோரியபடி, வெள்ளை அறிக்கை வைக்க முன் வராமல், இன்றைய முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஏனோதானோ வென்று நிறைவேற்றப்பட்ட ஒன்றிரண்டு சாதாரண அறிவிப்புகளை மட்டும் கூறிச் சமாளித்தாரே தவிர, மற்ற அறிவிப்புகளெல்லாம் மண்ணில் புதைந்து மக்கிப் போய் விட்டனவா? கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், பக்கம் 31இல் "இந்த அரசு வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று இன்றைய முதலமைச்சர் தான் பேரவையில் படித்தார். அக்டோபர் மாதம் போய் நான்கு மாதங்கள் நகர்ந்து விட்டன. தற்போது அடுத்த மே மாதத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்ட அறிவிப்புக்கே இந்தக் கதி என்றால், மற்ற அறிவிப்புகளுக்கு ஏதாவது பொருள் இருக்க முடியுமா? நான்காண்டுகள் கழிந்த பிறகு மாநாடு நடத்துவது, குதிரைகள் களவு போன பின் லாயத்தைப் பூட்டி வைக்கும் புத்திசாலித்தனத்தைப் போலல்லவா இருக்கிறது?

இந்த மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சியே நடைபெறவில்லை என்பது வெட்கக் கேடு அல்லவா? அ.தி.மு.க. ஆட்சியின் தொழில் வளர்ச்சி "மைனஸ் மூன்று சதவிகிதம்" என்பது மிகப் பெரிய வெட்கக் கேடு அல்லவா?

ஆளுநர் உரை என்பது ஜனவரி மாதத்திலேயே நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி முடிந்து பிப்ரவரியிலும் 17ஆம் தேதி அன்று தான் மிகவும் தாமதமாக நிகழ்த்தப்படுகிறது. எனவே இது ஆறிய கஞ்சி; பழங்கஞ்சி; பசி தீரப் பயன்படாத கஞ்சி! இந்த இலட்சணத்திலே அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநர் உரை எதற்காக? யாருக்காக? எனவே இந்த வெற்றுக் காகித உரையைப் புறக்கணித்துத் தி.மு.க வெளிநடப்பு செய்கிறது!" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x