

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது 16.80 சதவீதமாகும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் இன்று மாலை வெளியிட்டார். அவர் வெளியிட்ட விவரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஏழு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 16 லட்சத்து 9 ஆயிரத்து 553 வாக்காளர்கள் உள்ளனர்.
எஸ்ஐஆர் வாக்காளர் சிறப்பு திருத்த பணியின் மூலம் ஒரு லட்சத்து 7,991 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் முகவரியில் இல்லாதவர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 816 பேர், முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 51 ஆயிரத்து 905 பேர், இரட்டைப் பதிவாக 20 ஆயிரத்து 182 பேர் என மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 2,124 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சில வாக்குச் சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 173 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் தேர்தலில் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.