

ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிச் சென்ற மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் கணவர் புகார் அளித்துள்ளார்.
தி.நகர் ஜி.என்.செட்டி தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 2009 ம் ஆண்டு சென்னை ஆணழகன் பட்டம் வென்றுள்ளார். அதே பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் எனக்கு ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்குச் சென்ற சாந்தி, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு விடுதியில் அவர் தங்கினார்.
திடீரென ஒரு நாள் என்னை செல்போனில் தொடர்பு கொண்ட சாந்தி, ‘எனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை. எனக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று கூறினார். சாந்தி என்னிடம் ரூ. 2.50 லட்சம் வரை ஏமாற்றியிருக்கிறார். பேஸ்புக் மூலம் இளைஞர்களை ஏமாற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பாண்டிபஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.