Published : 17 Feb 2015 02:35 PM
Last Updated : 17 Feb 2015 02:35 PM

அகதிகளை திருப்பி அனுப்பும் பிரச்சினையில் தமிழக அரசின் முடிவு சரியானதே: ஆளுநர் ரோசய்யா

இலங்கையில், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்னும் மறுகுடியமர்த்தப்படாதிருக்கும் நிலையில் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப அரசு எதிர்ப்பு தெரிவித்தது சரியானதே என தமிழக ஆளுநர் ரோசய்யா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அவர் கூறும்ப்போது, "அண்மையில், இலங்கைத் தமிழ் அகதிகள் விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவது குறித்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், இன நல்லிணக்கம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், தற்போது அங்கு நிலவிவரும் பயம் மற்றும் மிரட்டல் நிறைந்த சூழல்; தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலை; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்னும் மறுகுடியமர்த்தப்படாதிருப்பது; புதிய இலங்கை அரசால் திட்டவட்டமான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படாதது போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து விவாதிப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

அதனால், இத்தகைய கூட்டம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என இந்த அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகள் 5 அமைதியான, நியாயமான முறையில் உரிய மரியாதையுடன் மறுகுடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதிகொண்டுள்ளது. அகதிகள் தாயகம் திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்கத் தேவையான, போதிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுபான்மைத் தமிழர்களின் சுயாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மீட்கப்பட்டு உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே இந்த அரசின் கருத்தாகும்" என்றார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு:

பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் தமது வாழ்வாதாரத்திற்காக அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்.

இலங்கையில் தூக்கு தண்டனையை எதிர்கொண்டிருந்த ஐந்து மீனவர்களை விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதிசெய்திட அம்மீனவர்களின் 6 வழக்குச் செலவுகள், அவர்கள் சிறையில் இருந்தகாலத்தில் அவர்களது குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி வழங்கியதுடன் அவர்கள் புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான நிதியுதவியையும் வழங்கி இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை நான் மனமார பாராட்டுகின்றேன்.

கச்சத் தீவு மீதான இந்தியாவின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி, பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநிறுத்துவதன் மூலமாக மட்டுமே, நமது மீனவர்கள் தொடர்ந்து சந்தித்துவரும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற தனது நிலைப்பாட்டினை இந்த அரசு மீண்டும் வலியுறுத்துகிறது என ரோசய்யா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x