

காஸ் மானியத் தொகையை நுகர்வோரின் கணக்கில் வரவு வைப்பதில், வங்கிகள் குளறுபடி செய்வதாக குறைதீர் கூட்டத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பவணந்தி தலைமையில் காஸ் நுகர்வோர் கூட்டம் நேற்று நடைபெற்றது. எண்ணெய் நிறுவன அலுவலர்கள், காஸ் ஏஜென்ஸி உரிமையாளர்கள், நுகர்வோர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ‘காஸ் அடுப்பு மற்றும் காஸ் குழாயை சோதனை செய்வதற்காக காஸ் ஏஜென்ஸிகள் அனுப்பியதாகக் கூறி வரும் நபர்கள், சோதனையே செய்யாமல் நுகர்வோரின் பெயர் மற்றும் காஸ் இணைப்பு எண் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு பணம் கேட்கின்றனர். பணம் தர மறுக்கும் நுகர்வோருக்கு சிலிண்டர்களை உரிய நேரத்தில் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்’ என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
வங்கிகள் பதில் சொல்வதில்லை
காஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் பேசும்போது, ‘சமையல் காஸ் மானியத் தொகையை நுகர்வோரின் கணக்கில் வரவு வைப்பதில் வங்கிகள் குளறுபடி செய்கின்றன. அதாவது, சிலிண்டர் வாங்கியவருக்குப் பதிலாக சிலிண்டர் வாங்காதவரின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படுகிறது. உத்திரமேரூர் பகுதியில் உள்ள வங்கிகளில் இதுபோன்ற குளறுபடிகள் அதி களவில் நடைபெறுகின்றன.
இதனால், மானியத் தொகையைக் கேட்டு நுகர்வோர்கள் காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்கின்றனர். இது குறித்து வங்கியில் முறையிட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை’ என்று புகார் தெரிவித்தனர்.
உடன் நடவடிக்கை
புகார்களுக்கு பதில் அளித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் காஞ்சிபுரம் மண்டல அலுவலர் மஞ்சுளா பேசியதாவது:
காஸ் அடுப்பு, குழாய் பாதுகாப் பாக உள்ளனவா எனக் கண்டறியவே சோதனை மேற்கொள்ளப்படு கிறது. ஆனால், சோதனைக்கு வருவோர் முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை என்ற புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மானியத் தொகையை வரவு வைப்பதில் உள்ள குளறுபடிகள் குறித்து எண்ணெய் நிறுவன உயரதி காரிகள் மூலம் அரசிடம் புகார் தெரிவிக்கப்படும்’ என்றார்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் பவணந்தி கூறும்போது, ‘கூட்டத்தில், நுகர்வோர் தெரி வித்த புகார் தொடர்பாக வங்கி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்படும். குளறுபடிகளை தவிர்ப்பதற்காகவே ஆட்சியர் தலைமையில் ஏற்கெனவே வங்கி மேலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. எனினும், தற்போது புகார்கள் வந்துள்ளதால், மீண்டும் வங்கி மேலாளர்களின் கூட்டம் நடத்தப்படும்’ என்றார்.