2-வது தவணை போலியோ முகாம்: தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது

2-வது தவணை போலியோ முகாம்: தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் உள்ள 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் 2-வது தவணையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இளம்பிள்ளை வாதம் என்ற கொடிய நோயை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 66 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். இந்நிலையில் 2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களுக்கு செல்லும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 1,000 நடமாடும் குழுக்களும் செயல்படவுள்ளன.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in