

ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின் மனைவியிடம் தமிழக அரசு சார்பில் ரூ.12 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 44-வது ராஷ்டிரீய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றிய சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தார்.
அத்துயரச் செய்தியை அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்ததுடன் ரூ.10 லட்சம் வழங்கவும் ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவிட்டார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் துணிச்சல் மிக்க தீரச் செயலைப் பாராட்டி இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘அசோக் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் கடந்த மாதம் நடந்த குடியரசு தின விழாவில், இந்த விருதை முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸிடம் குடியரசுத் தலைவர் வழங்கினார். தாய்த் திருநாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் துணிச்சல் மிக்க தீரச் செயலைப் பாராட்டி மத்திய அரசு சக்ரா விருதுகளை வழங்குகிறது.
சக்ரா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பணமுடிப்பு வழங்கப்படுகிறது.மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் பணமுடிப்பு ரூ.12 லட்சத்துக்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸிடம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.