Published : 07 Feb 2015 12:26 PM
Last Updated : 07 Feb 2015 12:26 PM

மதுரை: 10-ம் வகுப்பில் நூறு சதவீதத் தேர்ச்சிக்காக 9-ம் வகுப்பு மாணவர்களை வெளியேற்றுவதாக புகார்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற, 9-ம் வகுப்பு முடித்தவுடனே படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 வரை நடைபெறுகின்றன. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பெரும்பாலும் 100 சதவீதத் தேர்ச்சியை எட்டிவிடுகின்றன. ஆனால், ஒரு சில அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீதத் தேர்ச்சி பெறுகின்றன.

இந்நிலையில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய சில அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் பின்தங்கிய மாணவர்களை வேறு பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர்ந்து கொள்ளுமாறு நிர்பந்தப்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள், வேறு அரசு பள்ளியைத் தேடி அலையும் நிலை உள்ளது. சிலர் படிப்பையே நிறுத்திவிடும் அவலமும் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட சில மாணவர் கள் கூறும்போது, நாங்கள் சுமாராக படிப்பதால் 10-ம் வகுப்பில் தேற மாட்டோம் என ஆசிரியர்கள் நினைக்கின்றனர். 9-ம் வகுப்பு முடித்தவுடன் வேறு பள்ளியில் சேருமாறு நிர்பந்திக்கின்றனர். மறுத்தால் 9-ம் வகுப்பில் பெயிலாக்கிவிடுவோம் என அச்சுறுத்துகின்றனர்.

எனவே அவர்கள் அறிவுறுத்தலின்படி, குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி பள்ளிகளில் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர வேண்டிய நிலையில் உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் சு.பாஸ்கரன் கூறியது: பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகப் பெயர் பெற்றுள்ளன. ஆகவே, ஒவ்வொரு தேர்விலும் 100 சதவீத இலக்கை அடைய, சுமாராக படிக்கும் 9-ம் மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றுகின்றனர்.

அவர்களையும் பள்ளியில் சேர்த்து தேர்ச்சிபெற வைக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியது: அனைவரையும் தேற வைப்பது ஆசிரியர்களின் கடமை. படிப்பில் பின்தங்கிய மாணவர்களை புறக்கணிப்பது ஆசிரியர்களின் இயலாமையைத்தான் காட்டுகிறது. இதுபற்றி புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x