Published : 18 Feb 2015 01:38 PM
Last Updated : 18 Feb 2015 01:38 PM

கோமாளி சொல்லை நீக்கக் கோரி அமளி: சட்டப்பேரவையில் திமுகவினர் வெளியேற்றம்

திமுக உறுப்பினர் ஜெ.அன்பழ கனை ‘கோமாளி’ என்று குறிப்பிட்டு பேசியதால் சட்டப் பேரவையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகை யிட்டு கோஷம் போட்டதால் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாட்சி ஜெயராமன் தொடங்கி வைத்து பேசினார். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு புதுக்கோட்டை, சங்கரன்கோவில், ஏற்காடு போன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று பட்டியலிட்டார்.

அப்போது திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் எழுந்து, ‘2006-ம் ஆண்டு முதல் நடந்த இடைத்தேர்தல் பற்றியும் பேச வேண்டும்’ என்று உரக்கக் கூறினார். தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ‘அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், உறுப்பினர் அன்பழகன் அடிக்கடி எழுந்து நின்று ‘பபூன்’ போல, அதாவது ‘கோமாளி’ போல நடந்து கொள்கிறார்’ என்று குறிப்பிட்டார்.

உடனே திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ‘கோமாளி’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினர். சிலர், முன் வரிசைக்கு வந்து பேரவைத் தலைவர் இருக்கை முன்பு முற்று கையிட்டபடி சத்தம் போட்டனர். எல்லோரும் ஒரே நேரத்தில் பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. திமுக உறுப் பினர்கள் அவரவர் இருக்கைக்கு போய் உட்காரும்படி பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டு, ‘பேரவைத் துணைத் தலைவர் பேசி யதை ஆய்வு செய்து, அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையாக இருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்கலாம்’ என்றார். ஆனால், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து நின்றபடி கூச்சலிட்டனர்.

பேரவைத் தலைவர் ப.தனபால், ‘கோமாளி என்ற வார்த்தை சட்டப்பேரவையில் பயன் படுத்தக்கூடாத வார்த்தை இல்லை. அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் நடந்துகொள்வது முறையல்ல. பேரவைத் தலைவரை முற்றுகையிடுவது சரியில்லை. உறுப்பினர் அன்பழகன் அடிக்கடி எழுந்து நின்று பேசுவதைக் கண்டிக்கிறேன். இதுபோல தொடர்ந்து நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன். திமுக உறுப்பினர்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்க முடியாது. ஆவணங்களை வரவழைத்துப் பார்க்கிறேன்’ என கூறினார்.

அதன்பிறகும் திமுக உறுப்பினர்கள் இருக்கையில் அமராமல் கூச்சலிட்டபடியே இருந்தனர். அவைக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியாதபடி கூச்சல், குழப்பமாக இருந்தது.

தொடர்ந்து பேரவைத் தலைவர் பேசும்போது, ‘கடந்த 1998-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி பேரவையில் நடந்த விவாதத்தின்போது, ‘அவையில் வசனம்போல பேசலாம், கோமாளி போல பேசக்கூடாது’ என்று துரைமுருகன் பேசியது அவைக்குறிப்பில் பதிவாகி உள்ளது. ‘கோமாளி’ என்ற வார்த்தை சட்டப்பேரவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தை இல்லை. எனவே, பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறிய அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆனால், திமுக உறுப் பினர்கள் தொடர்ந்து சத்தம் போட் டபடி இருந்ததால், அவர்களை அவையில் இருந்து வெளியேற் றுமாறு காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, திமுக உறுப்பினர்களை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.

வெளிநடப்பு

முன்னதாக, பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், சட்டப்பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து சில பிரச்சினைகள் பற்றி பேச முற்பட்டார். அப்போது பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டு, ‘ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நீங்கள் பேசிக் கொள்ளலாம். அப்போது பதில் கிடைக்கும். இந்த கூட்டத் தொடரில் ‘நேரமில்லா நேரம்’ இல்லை என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது’ என்றார்.

திமுக உறுப்பினர்கள் அனை வரும் எழுந்து நின்று மு.க.ஸ்டாலினை பேச அனுமதிக்கு மாறு கோரினர். பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x