

சூரியஒளி மின்உற்பத்தி திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 2 ஆயிரம் இருவழிப் பயன்பாட்டு மீட்டர்களை தமிழக மின்சார வாரியத்திடம் எரிசக்தி மேம்பாட்டு முகமை கேட்டுள்ளது.
வீடுகளில் சூரியஒளி மின்உற்பத்தி தொடங்க மானிய உதவி அளிக்கும் திட்டம் இந்தியாவில் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், ‘முதல்வரின் சூரிய மேற்கூரை மின் உற்பத்தித் திட்டம்’ என்ற பெயரில் இத்திட்டத்தை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) கடந்த 2013 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஒரு குடியிருப்புக்கு 1 கிலோவாட் திறன் கொண்ட சூரியஒளி மேற்கூரை அமைப்பு பொருத்தப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகபட்சம் 5 பேர் இணைந்து 5 கிலோவாட் உபகரணத்தைப் பொருத்திக்கொள்ளலாம். இதற்கான மொத்த செலவு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் வரை ஆகும். அதில் 30 சதவீதத்தை மத்திய அரசும், ரூ.20 ஆயிரத்தை தமிழகம் அரசும் மானியமாக வழங்குகின்றன. அதாவது ரூ.50 ஆயிரம் இருந்தால் சூரியஒளி மேற்கூரை அமைப்பை பொருத்திக்கொள்ள முடியும்.
வீடுகளில் உள்ள இந்த அமைப்பு, அரசு மின்தொகுப்புடன் (கிரிட்) இணைக்கப்பட்டிருக்கும். அது இருவழி இணைப்பு என்பதால், வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கிரிட்டுக்கு அனுப்பமுடியும். கிரிட்-ல் இருந்து மின்சாரம் எடுக்கவும் முடியும். எவ்வளவு அனுப்புகிறார்கள், எவ்வளவு பெறுகிறார்கள் என்ற இரண்டையும் கணக்கிட நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் ‘நெட்மீட்டரிங்’ என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, பயனாளிகளின் வீடுகளில் இருவழிப் பயன்பாட்டு மீட்டர்கள் பொருத்தப்பட்டுவருகின்றன.
தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளாகியும், வெகு சிலரே இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது எரிசக்தித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவரை 2,257 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் (www.teda.in) மூலம் 2,161 மனுக்கள் வந்துள்ளன. ஆனால், மொத்தம் 255 வீடுகளில் மட்டுமே இத்திட்டம் செயல்படுகிறது. அதிலும், 118 வீடுகளில் மட்டுமே இருவழிப் பயன்பாட்டு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
500 யூனிட்டுக்கு மேல் மின்பயன்பாடு உள்ளவர்களுக்கு இத்திட்டம் லாபகரமாக இருக்கும். இத்திட்டம் பற்றி மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. தவிர, நாங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள 17 தனியார் நிறுவனங்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பமும் காணப்படுகிறது.
இருவழிப் பயன்பாட்டு மீட்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, 2 ஆயிரம் இருவழிப் பயன்பாட்டு மீட்டர்கள் தேவை என்று மின்வாரியத்திடம் கேட்கப்பட்டுள்ளது. 500 மீட்டர்கள் உடனே தேவை என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை மின்வாரியம் கோரியுள்ளது. அந்த மீட்டர்கள் வந்ததும் இத்திட்டம் சூடுபிடிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.