

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களின் மீது, 192 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கைக்குப் பின் மூன்று பறக்கும் படைகள், மூன்று வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மூன்று சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில், 12 கூடுதல் பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 9ம் தேதி முதல் 192 வழக்குகள் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 837 இடங் களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பார்வையாளரின் உத்தரவுப்படி, 25 பறக்கும் படைகள் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு குழுக்களின் சோதனைகளில் 17,250 வாகனங்கள் சோதனையிடப்பட்டு, 48 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் அமைந்துள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1800 425 7030 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 134 புகார்கள் பதிவாகி, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள 1950 என்ற எண்ணில் 21 புகார்கள் பெறப்பட்டு, அவை நடவடிக்கைக்காக திருச்சி மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் மொபைல் போன்கள் மூலம் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கி, ஆன்லைனிலும் புகார்கள் பதிவு செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.