

சென்னையில் சட்டக் கல்லூரி இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்க்கும் மாணவர்கள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக மாணவர் அணி செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசின் தவறான முடிவை எதிர்த்து ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை திருவள்ளூருக்கு மாற்றும் அரசின் முடிவு மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இந்தப் பிரச்சினையை தீர்க்க இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரியை இடமாற்றம் செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலை நிறுத்துவதுடன், அதற்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என புகழேந்தி தெரிவித்தார்.