ராணிப்பேட்டை விபத்து பற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் 4 பேர் குழு அறிக்கை தாக்கல்

ராணிப்பேட்டை விபத்து பற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் 4 பேர் குழு அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

ராணிப்பேட்டையில் தோல் கழிவு தொட்டி உடைந்த விபத்து தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரிடம் 4 பேர் குழுவின் அறிக்கை நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலைய கழிவு தொட்டி உடைந்து 10 பேர் பலியாகினர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பரவியுள்ள தோல் கழிவுகள் அகற்றும் பணியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், கழிவுத் தொட்டி உடைந்ததால் நச்சுத்தன்மை உள்ள கழிவுகள் சிப்காட் வளாகத்துக்கு பெருமளவு மாசு ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதை சரிசெய்வது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிப்ரவரி 5-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

4 பேர் கொண்ட குழு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எஸ்.ஸ்கந்தன் உத்தரவின்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் முதன்மைப் பொறியாளர் சுந்தரகோபால், இணை முதன்மை பொறியாளர் ஜெயக்குமார் டி.சி.எத்திராஜ், இணை முதன்மை பொறியாளர் சேகர், சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் சண்முகம் ஆகியோர் கொண்ட 4 பேர் குழு அமைக்கப் பட்டது.

இவர்கள், நேற்று காலை ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பான முழுமையான அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஸ்கந்தனிடம் நேற்று மாலை தாக்கல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in