

இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவரும் ஸ்ரீரங்கத்தில், திமுகவினர் மீதான கைது நடவடிக்கை என்பது அதிமுகவினர் நடத்திய நாடகம் என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
திமுக பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்துக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஸ்ரீரங்கம் தொகுதியில் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடும் சூழலில்தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் திமுகவினர் மீதான கைது நடவடிக்கை என்பது, அதிமுகவினர் நடத்திய நாடகம். திருட்டை நிகழ்த்தியவன் “திருடன்.. திருடன்..” என்று மக்களோடு மக்களாக கூச்சலிடுவதுதான் அங்கே நடந்தது. போலீஸார் மற்றும் அதிகாரிகள் உதவியோடு திட்டமிட்டு அதிமுகவினர் இதை மேற்கொள்கின்றனர் என்றார் ஸ்டாலின்.