Published : 19 Feb 2015 11:17 AM
Last Updated : 19 Feb 2015 11:17 AM

தேமுதிகவினர் கடும் எதிர்ப்பு: அமைச்சர் பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

எதிர்க்கட்சி கூட்டணி குறித்து அமைச்சர் கோகுலஇந்திரா கூறிய வார்த்தைக்கு தேமுதிக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று அதிருப்தி தேமுதிக உறுப்பினர் அருண் சுப்ரமணியன் (திருத்தணி) எழுப்பிய ஒரு கேள்விக்கு கைத்தறித்துறை அமைச்சர் கோகுலஇந்திரா பதில் அளித்தார். அப்போது, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து ஒரு வார்த்தையை அமைச்சர் குறிப்பிட்டு பேசினார்.

அதற்கு தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி கோரினர். அவர்களை இருக்கையில் அமரும்படி பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். அதன் பிறகும் தேமுதிக உறுப்பினர்கள் கூச்சலிட்டபடி இருந்தனர்.

அவை முன்னவர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்: தேமுதிக உறுப்பினர்கள் கோருவதுபோல, அமைச்சர் பேச்சில் குற்றச்சாட்டு இருந்தால் அதுபற்றி பேரவைத் தலைவர் ஆய்வு செய்யலாம். பேரவைத் தலைவர்: அவைக்குறிப்பைப் பார்த்து முடிவு செய்கிறேன். குற்றச்சாட்டுபோல இருந்தால் அந்த வார்த்தையை நீக்கிவிடுகிறேன்.

அமைச்சர் கோகுலஇந்திரா: தேமுதிக உறுப்பினர் பார்த்தசாரதி அமர்ந்து கொண்டு முன்னாள் முதல்வர் பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை பேரவைத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. பேரவைத் தலைவர்:

அனுமதி இல்லாமல், உறுப்பினர்கள் அமர்ந்தபடி பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது. அமைச்சர் பேசிய வார்த்தைக்கு தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. இவ்வாறு பேரவைத் தலைவர் அறிவித்ததும் தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினை முடிவுக்கு வந்தது.

முன்னதாக அருண் சுப்ரமணியன் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு அவரை வெகுவாகப் பாராட்டினார். இப்படிப் பேசுவதை அனுமதிக்கக்கூடாது என்று திமுக உறுப்பினர் பெரியகருப்பன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய அருண் சுப்ரமணியன், ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்து பேச்சை முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x