Published : 17 Feb 2015 06:52 PM
Last Updated : 17 Feb 2015 06:52 PM

அகதிகள் பிரச்சினையை திசை திருப்புகிறது தமிழக அரசு: தமிழிசை

இலங்கைத் தமிழ் அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் திட்டம் தொடர்பான கூட்டத்தில் தமிழக அரசு தனது பிரதிநிதிகளைக் கூட அனுப்பாமல், ஆளுநர் உரை மூலம் அந்தப் பிரச்சனையைத் திசை திருப்புகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "எப்போதும் போலவே ஆளுநர் உரை சடங்கு சம்பிரதாயமாக முடிந்திருக்கிறது. எப்படி இடைத்தேர்தல் என்றால், எப்படியாவது ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பதை போல், ஆளுநர் உரை என்றாலே ஆளும் கட்சியின் உரை என்பதை ஆளுநர் உரை மிக அதிகமாகவே நிரூபித்திருக்கிறது. ஆனால், இதில் நமக்கு மனதுக்கு நெருடுவதாக இருப்பது என்னவென்றால், சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது என்கிறார். ஆனால் தங்கம் அணிந்து வீட்டிலும் தங்க முடியவில்லை, வெளியிலும் நடமாட முடியவில்லை என்ற நிலையிலேயே தமிழகம் உள்ளது.

அதுமட்டுமல்ல கொலைகளும் அதிகமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் வள்ளலார் பிறந்தநாள் அன்று சாராயம் விற்றவர்கள் பற்றி காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தார் என்பதற்காக நாகராஜ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். நடுச்சாலைகளில் கொலைகளும் குறைவில்லாமல் நடந்து வரும் நிலையில் சட்டம் சரியாக இருக்கிறது என்றால் அதுவே கவர்னரின் உரை எந்த குறியீட்டில் உள்ளது என்பது தெரிகிறது.

குறைசொல்ல வேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால் நல்லாட்சியில் குறியீடுகளாக உரையில் சொன்ன அத்தனையும் குறையுள்ளவையாகவே இருப்பதால் நம்பிக்கை வர மறுக்கிறது.

இலங்கையில் கைது செய்யப்பட்டு தூக்கு கயிற்றுக்கு மிக அருகில் இருந்த தமிழக மீனவர்களை தாயுள்ளத்தோடு மீட்டெடுத்தவர் நரேந்திர மோடி. அவர் எடுத்த நல்ல முயற்சி மறைக்கப்பட்டிருப்பதைப் போலவே ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

அதுபோலவே இங்கே உள்ள இலங்கை அகதிகளின் நிலையையும் அவர்கள் நாட்டிற்கு திரும்ப அனுப்பும் திட்டத்தைப் பற்றியும் நியாயமாகவும், விவரமாகவும் விவாதிப்பதற்கு மத்திய அமைச்சர் கூட்டம் கூட்டப்பட்டால், அதற்கு பிரதிநிதிகளைக் கூட அனுப்பாமல் இருந்து விட்டு, ஆளுநர் உரை இன்று அந்த பிரச்சனையைத் திசை திருப்புவதாக அமைந்திருப்பதும் வருத்தமளிக்கிறது.

அதுபோல் உணவு பாதுகாப்புத் திட்டமாக இருக்கட்டும், மெட்ரோ ரயில் திட்டமாக இருக்கட்டும், மத்திய அரசு மாநில அரசோடு தெளிவான நடைமுறையை மேற்கொண்ட பின்பும் மத்திய அரசின் முயற்சியை மறைக்கும் விதமாகவே ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

எல்லாவற்றிருக்கும் மேலாக எந்த புதிய திட்டமும், தமிழகத்தில் தடம் பதிக்கும் திட்டம் இல்லாதது ஏமாற்றமே. தமிழகம் ஏற்றம் பெற வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்த நிலையில, அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி எதிர்ப்பை அதிகம் பெற்ற உரையாக ஆளுநர் உரை அமைந்திருக்கிறது" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x