Published : 25 Feb 2015 04:45 PM
Last Updated : 25 Feb 2015 04:45 PM

கன்னியாகுமரியில் மேலும் 2 போலி மருத்துவர்கள் கைது: பின்னணியில் இருப்பது உண்மை மருத்துவர்கள்

கன்னியாகுமரியில் மேலும் போலி மருத்துவர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இத்தகைய போலி நபர்களுக்கு எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் சிலர் உதவி புரிவது அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் தொடர்பான புகார்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிக அளவில் வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 போலி மருத்துவர்கள் பிடிபட்டனர். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தொடர் சோதனை நடத்தப்படுகிறது.

சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரவீந்திரன், காசநோய் மைய துணை இயக்குநர் வி.பி.துரை, மருந்தியல் ஆய்வாளர் ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், செட்டிக்குளம் - சவேரியார் ஆலய சாலையில் உள்ள `மோனிஷா கிளீனிக்கில்’ நேற்று சோதனை நடத்தினர்.

நாடகம்

அப்போது மருத்துவமனை பூட்டியிருந்தது. அங்கு மருத்துவரின் பெயர் ஹோஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அறிவிப்புப் பலகையில் இருந்த தொலைபேசி எண்ணில் அதிகாரிகள் தொடர்புகொண்டபோது, அதை எடுத்தவர், தான்தான் டாக்டர் என்றும், உடனடியாக அங்கு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், கிளீனிக்குக்கு வந்து அதிகாரிகளைப் பார்த்ததும், தனது அண்ணன் ஹோஸ் என்பவர்தான் டாக்டர், அவர் வெளியூர் சென்றிருக்கிறார் என பொய் கூறினார். ஆனால், அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் அந்த நபர்தான் சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவித்தனர்.

அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்ததில், அவர் மேற்கு வங்க மாநிலம் முர்ஸிதாபாத்தைச் சேர்ந்த ரஞ்சித் லோதா (27) என்பதும், அவர் எம்.பி.பி.எஸ் படிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. சிறந்த மருத்துவர் என்பதற்காக தான் வாங்கியதாக அவர் கிளீனிக்கில் வைத்திருந்த நினைவுப் பரிசும் போலியானது எனத் தெரியவந்தது. ரஞ்சித் லோதாவை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் மார்த்தாண்டம் பகுதியில் போலியாக அலோபதி மருத்துவம் செய்த ஷியாமள் குமார் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.

அதிர்ச்சி பின்னணி

சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரவீந்திரன் கூறியதாவது: நாங்கள் சோதனையில் ஈடுபடுவது தெரிந்ததும், பல இடங்களில் போலி மருத்துவர்கள் உஷார் அடைந்துவிட்டனர்.

உண்மையிலேயே எம்.பி.பி.எஸ். படித்து சான்றிதழ் பெற்ற ஒரு சில மருத்துவர்களின் சான்றிதழை பயன்படுத்தி, அவர்களின் பெயரில் போலி மருத்துவர்கள் மருத்துவமனையை நடத்தி வருவதை விசாரணையில் கண்டறிந்தோம். அதுபோன்று, 10-க்கும் மேற்பட்ட கிளீனிக்குகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், ‘அவர் கம்பவுண்டராகத்தான் இருந்தார். அந்த மருத்துவமனையின் மருத்துவர் நான்தான்’ என்று சான்றிதழில் இடம்பெற்றுள்ள உண்மையான மருத்துவர் ஆஜராகிறார். இதனால், போலி மருத்துவர்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர்.

உயிர் காக்கும் மருத்துவக் கல்வியை படித்துவிட்டு, அந்த சான்றிதழை இதுபோன்று போலி மருத்துவர்கள் பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது. போலிகளின் மருத்துவக் கொள்ளைக்கு துணையாக செயல்படும் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் சிலரின் பட்டியலை தயாரித்துள்ளோம். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளோம். உரிய ஆதாரம் இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x