சீமான் தலைமையை ஏற்க முடியாது: நாம் தமிழர் கட்சி மூத்த நிர்வாகி அறிவிப்பு

சீமான் தலைமையை ஏற்க முடியாது: நாம் தமிழர் கட்சி மூத்த நிர்வாகி அறிவிப்பு
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயல்படும் சீமானின் தலைமையை ஏற்க முடியாது என்று அக்கட்சியின் பன்னாட்டு ஊடகவியலாளர் கா.அய்யநாதன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உள்ள, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய அய்யநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், தன்னிச்சையாகவும் சீமான் செயல்படுவதால் தொடர்ந்து கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, எங்களால் சீமான் தலைமையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் விருப்பத்துக்கு எதிராக, அவர்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சி ஐ.நா. சபையின் பிரகடனத்துக்கு எதிரானது.

இலங்கை வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை அகற்றாமல் நிலத்தை மீட்க இயலாது. தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை அகற்றவும் தற்போதைக்கு வாய்ப்பில்லை. எனவே, இங்குள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பினால் ஆபத்து ஏற்படும்.

தமிழகத்தில் 2016-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட உள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் மீத்தேன் திட்ட சோதனை முயற்சிக்கு எதிராகச் செயல்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் மாறன், காரைக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல, அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். யார் தலைமையில் செயல்படுவது என்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒரு மாதத்தில் முடிவெடுப்போம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in