

வசந்த் அண்ட் கோ நிறுவனர் எச்.வசந்தகுமார், தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின் தொகுப்பு, ‘வெற்றிப் படிக்கட்டு’ என்ற பெயரில் நூலாக வெளியாகிறது. நூல் வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடக்கிறது.
வசந்த் அண்ட் கோ நிறுவனர் எச்.வசந்தகுமார் ‘வெற்றிப் படிக்கட்டு’ என்ற தலைப்பில் வசந்த் தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாகவும், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி அமைத்துக்கொள்ளும் விதமாகவும் அவரது உரை அமைந்துள்ளது. இந்த உரைகள் தொகுக்கப்பட்டு ‘வெற்றிப் படிக்கட்டு’ என்ற பெயரிலேயே நூலாக வெளிவருகிறது.
இந்நூல் வெளியீட்டு விழா, சென்னை காமராஜர் அரங்கில் நாளை (ஞாயிறு) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நூலை வெளியிட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு பெற்றுக்கொள்கிறார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
வசந்தகுமாரின் உரைகள் 75 அத்தியாயங்களாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே 50 அத்தியாயங்கள் கொண்ட ‘வெற்றிப் படிக்கட்டு’ நூல் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிடப் பட்டுள்ளது. அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.