

அரசு, உள்ளாட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்ட ‘தமிழ் வாழ்க’ என்ற நியான் விளக்கு ஒளிரும் பலகைகள் தற்போது கவனிக்கப்படாத தலைவர்கள் சிலைகள் போன்று விடப்பட்டிருக்கின்றன. இன்று சர்வதேச தாய்மொழிகள் தினத்தை கொண்டாடும் நிலையில் தமிழுக்கு நேர்ந்துள்ள இச்சோதனை குறித்து தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது அரசுத்துறை, உள்ளாட்சி அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ என்ற வாசகம் அடங்கிய பலகைகள் இரவில் ஒளிரும் வகையில் நியான் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதற்காக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டது.
இருண்டு கிடக்கின்றன
தாய்மொழியான தமிழ் வாழவேண்டும் என்று உணர்த்தும் நோக்கத்தில் வைக்கப்பட்ட இந்த ஒளிரும் பலகைகள் திமுக ஆட்சியில் இருக்கும்வரையில் ஒளிர்ந்தன. தமிழை வாழ வைக்க உருப்படியான காரியங்கள் செய்யாமல் இப்படி பெயர்பலகை வைத்தது தேவையற்றது என்று அப்போது விமர்சனங்களும் எழுந்தன. இந்த ஒளிரும் பலகைகளுக்கு செலவிடப்படும் மின்கட்டணத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டியிருந்ததால் கூடுதல் சுமையாக இது உருவெடுத்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் இந்த பலகைகள் இருண்டு கிடக்கின்றன. பல அலுவலகங்களில் உடைந்து, கேட்பாரற்று விடப்பட்டிருக் கின்றன. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள் என்று அனைத்திலும் ‘தமிழ் வாழ்க’ ஒளிரும் பலகைகள் இருண்டி ருக்கின்றன.
மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் இந்த பலகையை தாங்கியிருந்த இரும்பு கம்பி உடைந்து பலகை கீழே கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளோ, உள்ளாட்சி பிரதிநிதிகளோ கவலைப் பட்டதாக தெரியவில்லை.
வீழ்ந்து கிடக்கிறது
தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ் ஈழன் கூறும்போது, ‘யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? தமிழ் வாழவேண்டும் என்ற நோக்கத்துக்காகவாவது இந்த பலகைகளை கவனிக்க வேண்டும். ஒளிரும் பலகை உடைந்து கிடப்பது மனதுக்கு உறுத்தலாகவே இருக்கிறது. வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் என்றும் மொழிப்போர் தியாகிகளை கவுரவப்படுத்துகிறோம் என்றும் செயல்படும் முக்கிய அரசியல் கட்சியினர் இதை கண்டுகொள்ளவில்லை. தமிழ் வீழ்ந்து கிடக்கிறது. தூக்கிவிட யாரும் இல்லை’ என்று தெரிவித்தார்.