Last Updated : 08 Feb, 2015 11:04 AM

 

Published : 08 Feb 2015 11:04 AM
Last Updated : 08 Feb 2015 11:04 AM

தமிழக காங்கிரஸ் செயற்குழு சென்னையில் இன்று கூடுகிறது: உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் மாநில செயற் குழுக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. இதில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பங்கேற்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் மேலிட பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் தலைமை வகிக்கிறார். இதில் கட்சி வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் நிர் வாகிகள் சிலர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸில் இளங்கோவன் கார்த்தி சிதம் பரம் மோதல், ஜெயந்தி நடராஜன் விலகல் என பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தச் சூழலில் முகுல் வாஸ்னிக் தமிழகம் வரு கிறார். செயற்குழுக் கூட்டத்தில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் பங்கேற்பார்கள். கடந்த முறை முகுல் வாஸ்னிக் வந்தபோது, கட்சி நிர்வாகிகள் குறித்து டாக்டர் செல்லக்குமார் கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதுபோல இப்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்று கட்சியினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜெயந்தி நடராஜன் விலகி விட்டதால், அவர் வகித்து வந்த தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் காங்கிரஸில் காலியாகவுள்ள மாவட்ட மற்றும் வட்டார பொறுப்புகளை நிரப்புவது குறித்தும் செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்படலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘சில நாட்களுக்கு முன்பு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கினோம். செயற்குழு கூட்டத்தில் மாவட்டந்தோறும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்துவது தொடர்பாக முகுல் வாஸ்னிக் ஆலோசனை வழங்கு வார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x