டேங்கர் லாரி ஸ்டிரைக் நீடிப்பு: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

டேங்கர் லாரி ஸ்டிரைக் நீடிப்பு: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை
Updated on
1 min read

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் களில் காஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியா முழுவதும் டேங்கர் லாரிகள் மூலம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் ஐஓசி நிறுவனம் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் டன் ஒன்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.06 தர வேண்டும் என வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக டேங்கர் லாரிகளில் சுமார் ஆயிரம் டன் எரிவாயு நிரப்பப்படாமல் உள்ளது. ஏற்கெனவே டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்ட எரிவாயு, எண்ணெய் நிறுவன மையங்களில் நேற்று நிரப்பப்பட்டது. இந்த லாரிகளும் இன்று முதல் இயங்காது.

இந்த டேங்கர் லாரிகளையும் சேர்த்து இன்று(திங்கள்கிழமை) முதல் மொத்தம் உள்ள 3,250 டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என தெரிகிறது.

இது குறித்து தென்மண்டல எல்பிஜி லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கார்த்திக் கூறும்போது, “எண்ணெய் நிறுவனங்கள் எங்களுடைய கோரிக்கையை ஏற்காத வரையில் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் தொடரும். இன்று(திங்கள்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் 3,250 டேங்கர் லாரிகள் சரக்குகளை ஏற்றாமல் போராட்டத்தில் பங்கு பெறும்’’ என்றார்.

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்னை எழிலகத்தில் லாரி உரிமையாளர்களுடன் இன்று (திங்கள்) பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in