Published : 21 Feb 2015 12:06 PM
Last Updated : 21 Feb 2015 12:06 PM

தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: மறுபரிசீலனைக்கு கட்சிகள் வலியுறுத்தல்

தேமுதிக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தேமுதிகவினர் மீதான நடவடிக்கை குறித்து பேச அனுமதி அளிக்காததால் திமுக, காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் சட்டப்பேரவை திமுக துணைத்தலைவர் துரைமுருகன் கூறியதாவது:

சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பணியாற்ற முடியாது என்று பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்றால் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை இருக்கும். அதனால் நீண்ட நாட்கள் அவர்களால் பணியாற்ற முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து திங்கள்கிழமை வரை நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடர் வரையுடன் சஸ்பெண்ட் நடவடிக்கையை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

உடனே, ‘திங்கள்கிழமை வரைதானே’ என்று நான் கேட்டேன். அதற்கு பேரவைத் தலைவர், ஆமாம் என்று தலையாட்டினார். அதற்காக பேரவைத் தலைவருக்கு நன்றியும் தெரிவித்தேன். பத்திரிகைகளில்கூட அப்படித்தான் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இப்போது ‘ஆளுநர் இந்தக் கூட்டத்தொடரை முடித்து வைக்கும் வரை தேமுதிக உறுப்பினர்கள் பேரவை நடவடிக்கையில் கலந்துகொள்ளக் கூடாது’ என்கிறார் பேரவை தலைவர். பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் முடிந்த பிறகுதான் இந்த கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைப்பார்.

அதுவரை தேமுதிகவினர் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கக் கூடாது என்கிறார். இப்போது, பேரவைத் தலைவர் யாருடைய பரிந்துரைக்கும் செவிசாய்க்கவில்லை என்கிறார். காரணம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்கவே வாய்ப்பு தரப்பட்டுள்ளது என கட்டம்கட்டி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை கிடைத்துவிடுமோ என கருதி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரை தேமுதிகவினர் உள்ளே வரமுடியாது என்று கூறினர். அவர்களிடம் பெருந்தன்மை இருக்கும் என கருதி மீண்டும் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்காததால் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘தேமுதிக எம்எல்ஏக்கள் மீது திங்கள்கிழமை வரை மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கூட்டத்தொடர் முழுவதுமாக பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதுதொடர்பாக பேச முயன்றபோது, பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாக இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் மீராகுமார் சபாநாயகராக இருந்தபோது, எதிர்க்கட்சியினர் அடிக்க முயற்சித்தபோதுகூட, எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தேமுதிக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கக் கூடாது என நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது அல்ல. இதை பேரவைத் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x