

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தாலுகா உருவாக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 வருவாய் கோட்டங்களில் 11 தாலுகாக்களில் 1,137 கிராமங்கள் உள்ளன. இதில் 648 கிராமப் பஞ்சாயத்துகள் 13 வளர்ச்சி வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு, செய்யூர், காஞ்சிபுரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மற்றும் திருப்போரூர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் தாலுகாவைப் பிரித்து, புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று, கடந்த ஆண்டு ஆகஸ்டில் சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, புதிதாக வாலாஜாபாத் தாலுகா உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் வாலாஜாபாத், மாகரல் ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு துணைக் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு காவல் நிலையமும், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் ஒரு பகுதியையும், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ளடங்கும் வட்டமாக உத்தேச வாலாஜாபாத் வட்டம் அமைகிறது. இந்த வட்டத்தில் வாலாஜாபாத் பேரூராட்சியும், 61 கிராமப் பஞ்சாயத்துக்களைக் கொண்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியமும் அமையும்.
வாலாஜாபாத் நகரில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. மேலும் இவ்வட்டத்தில் பாலாறு நதி ஓடுவதுடன், மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய ஏரியான தென்னேரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து பெறப்படும் தண்ணீரிலிருந்து சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பயிர் செய்கின்றனர்.
வாலாஜாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தத் தாலுகா 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த புதிய தாலூக்காவின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 772 ஆகும். காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் இந்த தாலுகாவின் பகுதிகள் அமையும். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டு வாலாஜாபாத் தாலுகா அமைந்துள்ளது என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.