Published : 25 Feb 2015 10:13 AM
Last Updated : 25 Feb 2015 10:13 AM

ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாள்: தலைமைச் செயலகத்தில் 10 நாள் மருத்துவ முகாம் தொடக்கம்

ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு, தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கான 10 நாள் சிறப்பு மருத்துவ முகாம் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கியது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில், 10 நாள் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்க விழா தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் முகாமை தொடங்கி வைத்து 10 அரசு ஊழியர்களுக்கு மருத்துவ அட்டைகளையும், 15 அரசு ஊழியர்களுக்கு மூலிகைச் செடிகளையும் 10 ஊழியர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார்.

அதன்பின் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்துடன், அப்பல்லோ மருத்துவமனை, தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் உதி கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன. வரும் மார்ச் 3-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். தினமும் பிற்பகல் 1.00 மணி வரை ஆண் பணியாளர்களுக்கும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெண் பணியாளர்களுக்கும் முகாம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகப் பணியாளர்கள் மற்றும் தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்கள் சிறப்பு மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, சித்த மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர். சித்தையகுமார், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க செயலாளர் கு.வெங்கடேசன், தலைவர் ஜே. கணேசன், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் சத்திய நாராயணரெட்டி, உதி கண் மருத்துவமனை டாக்டர். ஆர்.ரவீந்திரன், பல் மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x