

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் ப.விஜயலட்சுமி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா அளித்த பதில் வருமாறு:
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கைத்தறி, விசைத்தறி நெசவு உள்ளது. 64 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 29 ஆயிரம் நெசவாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.38.30 கோடி தள்ளுபடி மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. முன்பு, பெடல் தறிக்கு 90 சதவீதம் மட்டும் மானியம் அளிக்கப்பட்டது. இந்த ஆட்சியில் பெடல் தறிக்கு முழு மானியம் வழங்கப்படுகிறது. 6 ஆயிரம் பெடல் தறிகள் வழங்க திட்டமிட்டு, இதுவரை 2 ஆயிரம் பெடல் தறிகள் வழங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 4 ஆயிரம் பெடல் தறிகள் விரைவில் வழங்கப்படும்.
விலையில்லா வேட்டி, சேலைகளை நெய்வதற்கு முதலில் கைத்தறிகளுக்கும், பின்னர் பெடல் தறிகளுக்கும், அதையடுத்து விசைத்தறிகளுக்கும் ஆர்டர் அளிக்கப்படுகிறது. விலையில்லா வேட்டி, சேலை நெய்து முடிந்த பிறகு, சீருடைகள் தைக்கின்றனர். மீதமுள்ள நாட்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், நெசவாளர்களுக்கு பலவகை துணிகள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.